சகோதரன் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: விசாரணைக்கு உத்தரவு

கூலித் தொழிலாளிக்கு அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால், சகோதரன் உடலுடன் சாலையோரம் சிறுவன் காத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சகோதரன் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: விசாரணைக்கு உத்தரவு
சகோதரன் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: விசாரணைக்கு உத்தரவு


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்ட மருத்துவமனையில், கூலித் தொழிலாளிக்கு அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால், சகோதரன் உடலுடன் சாலையோரம் சிறுவன் காத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலையோரம் ஒரு சுவர் ஓரமாக, தனது மடியில், இறந்துபோன சகோதரனின் உடலை ஒரு துணியால் மூடியபடி கிடத்திக் கொண்டு சிறுவன் ஒருவர் அமர்ந்திருந்த விடியோ கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா கூறுகையில், அமரர் ஊர்தியெல்லாம் மறுக்கப்படவில்லை. விடியோ குறித்து வெளியான தகவல் உண்மையில்லை. கிராமத்திலிருந்து தினக்கூலி தொழிலாளி ஒருவர்  தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. மருத்துவமனையில் சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர். அவர் சிறுவனின் உடலை மற்றொரு மகனிடம் கொடுத்துவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் அந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமன் நிர்வாகிக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, கூலித் தொழிலாளி பூஜாராம், பட்ஃபாரா கிராமத்தைச் சேர்ந்தவர். அம்பா மருத்துவமனைக்கு சனிக்கிழமை தனது மகன் குல்ஷானுடன், மற்றொரு மகன் ராஜதாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையல் வந்திருந்தார். அவனது வயிற்றுப் பகுதியில் ஏராளமான தண்ணீர் சுரந்திருந்தது.

குழந்தைக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார். இதனால், அமரர் ஊர்தியை கூலித் தொழிலாளி கேட்டதற்கு, இப்போது ஊர்தி இல்லாததால், வெளியில் சென்று வாடகைக்கு வாகனத்தை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அப்போது, அவரிடம் பணம் இல்லாததால், ஒவ்வொரு அமரர் ஊர்தி ஓட்டுநர்களிடம் போய் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். இதனால், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, குல்ஷான் தனது சகோதரன் ராஜாவின் உடலுடன் சாலையோரம் காத்திருந்தார்.

அந்த சிறுவனின் நிலையை அறிந்து உதவி செய்ய யாரும் முன் வராமல், அவனை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பலரும் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com