இதுதான் இந்தியா: அமர்நாத் பக்தர்களை முதுகில் சுமக்கும் முஸ்லிம் இளைஞர்கள்
இதுதான் இந்தியா: அமர்நாத் பக்தர்களை முதுகில் சுமக்கும் முஸ்லிம் இளைஞர்கள்

இதுதான் இந்தியா: அமர்நாத் பக்தர்களை முதுகில் சுமக்கும் முஸ்லிம் இளைஞர்கள்

கான்பூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்கள்,  அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லக்னௌ: கான்பூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக, தங்களது மத நம்பிக்கை மற்றும் எல்லைகளைக் கடந்து, அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமர்நாத் யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பால்டால் முகாமுக்கு, அமர்நாத் யாத்திரைத் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பே சென்றுவிட்டனர் இந்த சகோதரர்கள்.

கான்பூரில் சரக்கு வாகனங்களை இயக்கி வந்த இர்ஷத் மற்றும் ஷம்ஷத் ஆகியோருக்கு, அமர்நாத் குகைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, உடனடியாக அவர்கள் கான்பூரில் உள்ள சிவ் சேவக் சமிதியை நாடினர்.  பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் பதௌரியா தலைமையில் இந்த அமைப்புதான் பால்டால் முகாமில் பக்தர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. 

இப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பக்தர்களுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இதர சேவைகளை சிவ் சேவக் சமிதிதான் செய்து வருகிறது. பால்டாலில் முகாம்கள் அமைத்து, அமர்யாத் பக்தர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக, 5 இ-ரிக்சா வசதியை உருவாக்கிய சமிதி, மிகவும் வயதான பக்தர்கள், குகைக் கோயிலுக்கு மிக அருகே செல்வதற்கு வசதியாக இதனை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக சமிதியின் பொதுச் செயலாளர் ஷீலு வெர்மா தெரிவித்தார்.

கான்பூர் கான்டினென்ட் பாஜக எம்எல்ஏ, அமர்நாத் யாத்திரை தொடங்கி நிறைவடையும் வரை அந்த முகாமிலேயே தங்கியிருப்பார். இப்போதும் அவர் அங்குதான் இருக்கிறார் என்று கூறிய வெர்மா, இந்த ஆண்டு முகாமுக்குத் தேவையான பொருள்களை சமிதி அனுப்பும் பணியை தொடங்கிய போது, சரக்கு லாரி ஓட்டுநர் இர்ஷத் எங்களை தொடர்பு கொண்டு, அமர்நாத் பக்தர்களுக்கு சேவையாற்றும் தங்களது விருப்பத்தைக் கூறினர்.

இர்ஷத் மற்றும் அவரது சகோதரர் ஷம்ஷத் ஆகியோர், அமர்நாத் குகை முகாமுக்குத் தேவையான பொருள்களை குறைந்தக் கட்டணத்தில் கான்பூரில் இருந்து எடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர்.

பால்டால் முகாமை அடைந்த இர்ஷத் மற்றும் ஷம்ஷத், அங்கு சரக்கு மற்றும் பொருள்களை இறக்கிவைத்துவிட்டு, அங்கிருக்கும் சிவ சேவாக் சமிதி உறுப்பினர்களுடன் இணைந்து, அமர்நாத் பக்தர்களுக்கு சேவையாற்ற முடிவு செய்தனர்.

முதலில், அங்கிருந்து, அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு, பிறகு பால்டால் முகாமுக்கு வந்து அங்கிருந்த அமர்நாத் பக்தர்களுக்கு சேவையைத் தொடங்கினர். தங்களது சரக்கு லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, சகோதரர்கள் இருவரும் இ-ரிக்சாவை ஓட்டும் பணியைத் தொடங்கினர். பால்டால் முகாமிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாராடி சாலை வழியாக பக்தர்களை குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டனர். இதனால், வயதான பக்தர்கள் நடைபயணம் சற்றுக் குறைந்து, அவர்களது பயணம் எளிதானது.

முஸ்லிம் சகோதரர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், குகைக் கோயில் வாரியமும் கூட, அவர்களுக்கு சேவாதார் என்ற அடையாள அட்டையை வழங்கி கௌரவித்துள்ளது.

பாராடி சாலையில் பக்தர்களை இறக்கிவிடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கியான் கிரி ஆசிரமம் வழியாக குகைக் கோயிலைச் சென்றடையவும் அவர்கள் உதவி வருகிறார்கள். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தங்களது முதுகில் சுமந்துச் சென்று, மிகக் கடினமான பாதையை கடக்க உதவி வருகிறார்கள் இவ்விரு சகோதரர்களும். இவர்கள், நாள்தோறும் சுமார் 180 - 200 பக்தர்களுக்கு  சேவையாற்றி வருகிறார்கள்.

கான்பூரில் சரக்கு லாரி ஓட்டுவதை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இந்த இர்ஷத் மற்றும் ஷம்ஷத் என்ற முஸ்லிம் இளைஞர்கள், ஜூஹி கதா பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர்களை, ஜூஹியில் காய்கறி விற்று அவர்களதுதாய் முன்னிதான் வளர்த்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com