அமர்நாத் யாத்திரை

இந்தியாவின் கிழக்குப் பகுதியில்,  உள்ள சிவத் தலத்தில்,  அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 
அமர்நாத் யாத்திரை

இந்தியாவின் கிழக்குப் பகுதியில்,  "காஷ்மீர்- பியூட்டிபுல் காஷ்மீர்' என்று அழைக்கப்படும் குளுமையான பகுதியில் உள்ள சிவத் தலத்தில்,  அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக,  கடந்த இரு  ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை.  இந்த ஆண்டு ஜூன் 30 முதல் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 11 வரை பயணிக்கலாம்  என்றவுடன் பக்தர்களைக் கேட்கவா வேண்டும்! வரிசை கட்டிவிட்டார்கள்.

நாட்டில் உள்ள பல முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றான அமர்நாத், கோடையில் பக்தர்கள்,  சுற்றுலாப் பயணிகளுக்காக சில மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அனைத்துப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இந்தக் கோயில்,  ஸ்டாலக்மைட் வடிவத்தில் உள்ள ஒரு பனி சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.

இந்துக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது திருக்கயிலாய யாத்திரை எனப்படும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு சிவனைத் தரிசிக்கவே விரும்புவார்கள். 

முக்கியமான குகை கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  ஆண்டின் பெரும்பகுதி பனியில் மூடியிருக்கும்.  இதனால் கோடைக் காலத்தில் யாத்திரைக்கு ஒரு குறுகிய சாளரத்தை அனுமதிக்கிறது.


அமர்நாத் குகையில் சிவபெருமான் வாழ்வு,  நித்தியத்தின் ரகசியமான அமரகதையை பார்வதி தேவிக்கு விவரித்தார் என்பது தல வரலாறு.

சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையான ஒரு குடைவரைக் கோயில். மே அல்லது ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கே பக்தர்கள் வந்து பனிலிங்க வடிவினராகக் காட்சி தரும் அமர்நாதரை தரிசித்து வழிபடுவது வழக்கம்.  பனியால் உருவான பனிலிங்கநாதரைத் தரிசிக்க முடியும்.  இங்கே சென்று தரிசனம் செய்ய, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

கோயில் அமைவிடம்: ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 140 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது.  தனியார் வாகனங்கள் என்றால், "சந்தன் வாடி' என்கிற இடம் வரை செல்ல முடியும். அங்கிருந்து நடைப்பயணமாக குகைக் கோயிலுக்குச் செல்லலாம்.

அரசுப் பேருந்துகள் என்றால்  ஸ்ரீநகரில் இருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ள "பாகல் காவ்' என்னும் இடம் வரைதான் செல்லும். அங்கிருந்துதான் நடைப்பயணம் ஆரம்பமாகிறது. பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கிருந்தே தங்கள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

"பாகல் காவ்' எப்போதும் மழைச்சாரலுடன் பக்தர்களை வரவேற்கும் ஓர் இடம். இங்கே, நம்முடைய பொருள்களைத் தூக்கிவர "டோலி' தூக்குபவர்கள் கிடைப்பார்கள். அதேபோல் நடக்க முடியாதவர்களை அழைத்துச் செல்ல கோவேறுக் கழுதைகளும் உள்ளன. 

பாகல் காவில் அனைத்து வசதிகளும் உடைய கூடாரங்கள் இருக்கின்றன. இங்கே யாத்திரைக்குச் செல்பவர்கள், குளித்து தயார் ஆவதற்கான வசதிகளும் உள்ளன. 

பதிவு செய்வது எப்படி? 

யாத்திரைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய,  ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் வாரிய இணையதளத்தைப் பார்வையிட்டு அறியலாம். "Whats New' என்பதைக் கிளிக் செய்து, "Register Online' விருப்பத்தை கிளிக் செய்து, தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.  

13 முதல் 75 வயதுக்குள்பட்டவர்கள் யாத்திரை செல்ல பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட தேதியில் யாத்திரையைத் தொடரலாம். அமர்நாத் சந்நிதி வாரியத்துக்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து பயணிகள் தங்கள் சுகாதாரச் சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் 4 புகைப்படங்கள், அரசு அங்கீகரித்த அடையாள அட்டை ஆகியவற்றை  எடுத்துச் செல்ல வேண்டும்.

இதுதவிர, பாரத ஸ்டேட் பாங்க், காஷ்மீர் பாங்க், யெஸ் பாங்க் போன்றவற்றின் தேர்வு செய்யப்பட்ட கிளைகளிலும் பதிவு செய்யலாம்.

யாத்திரை செல்வோர் கவனத்துக்கு...: அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன.  பால்டால் வழியாக குறுகிய பாதை,   ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி.  ஜம்முவிலிருந்து பஹல்காம்,  பால்டலுக்கு தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம்.  இல்லையெனில்,  அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம்.

ஸ்ரீநகர் அல்லது பஹல்காமில் இருந்து தொடங்கினால்,  14,000 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்வீர்கள். அதாவது பயணத்தை மேற்கொள்வதற்கு நீங்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

குகைக்கு ஹெலிகாப்டர் பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் நீண்ட கடினமான மலையேற்றத்தைத் தவிர்க்கலாம். ஹெலிகாப்டர் சேவைகளைப் பெற, நீங்கள் பயணத்திற்குத் தகுதியானவர் என்பதைச் சான்றளிக்க, யாத்ரா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் இருந்து மருத்துவத் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

யாத்திரையின்போது,  பசியைப் போக்குவதற்காக, ரொட்டிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள் எடுத்துச் செல்லத் தேவையில்லை. சுவையான ஓடை நீர் ஆங்காங்கே கிடைக்கிறது.  ஸ்வெட்டர், குல்லா, துண்டுகள் எடுத்துச் செல்வது மிக அவசியம்.  வழியில் உள்ள பாறைகளில் ஓய்வெடுத்துக் கொள்ளவும், குளிரில் இருந்து காத்துக் கொள்ளவும் இவை உதவும்.

ஒவ்வொரு குழு புறப்படுவதற்கும் முன்பாக சாமியார்கள் சங்கு ஊதிய பின்னரே,  யாத்திரை தொடங்குகிறது.  "ஹர ஹர மகாதேவ்',  "ஜெய் போலேநாத்' போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன.  "சிவாய நம' என்று தமிழர்களும் கோஷம் எழுப்பத் தவறுவதில்லை.

கற்களால் ஆன மேடான பகுதிகளில் துணிகளாலான கொடிகளே தென்படும். அதன் அருகில் பூஜை சாமான்கள் இருக்கும்.  இது அந்தப் பகுதியில் இறந்துபோனவர்களைப் புதைத்த இடம்  என்பதால், அவற்றைக் கோயில் என்று கருதி வழிபட வேண்டாம்.

காலையில் பயணிக்க ஆரம்பித்தால், சரியாக மாலை சந்தன்வாடி என்கிற இடத்தை அடையலாம். இரண்டாம் கட்டமாக பக்தர்கள் தங்கும் இடம்தான் சந்தன்வாடி. 

அங்கே பக்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே "ஹர்வா' கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் காத்திருப்பார்கள்.  இவர்கள் பக்தர்களுக்கு உணவு, பருத்தியால் ஆன ஆடைகள் உள்ளிட்ட பொருள்களையும் இலவசமாக வழங்குகின்றனர்.

சந்தன்வாடியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் "பிச்சுடோப்'. தேளின் கொடுக்குபோல இந்த மலைப் பாதை இருப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. இங்கும் தங்கி ஓய்வெடுக்க இடம் உண்டு. சிறிது தூரம் சென்றால், "சேஸ்பால்' என்னும் முகாம் இருக்கும். இந்தப் பகுதியில் இயற்கை நீரூற்றுகள் மிக அதிகம்.

அடுத்ததாக "லெககோடி கேம்ப்' வரும். இங்கே அனைத்து மதத்தவராலும் வணங்கப்படும் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது.

அடுத்ததாக,  ஓய்வெடுக்க "வார்பல்' எனப்படும் செயற்கை கேம்ப் இருக்கும்.  பின்னர்,  மலை உச்சியில் "மேகாகன் கேம்ப்' இருக்கும்.  

இங்கே முதலுதவிகள் அனைத்தும் கிடைக்கும்.  மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு,  பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வார்கள்.  உணவுகளும் கிடைக்கும். அடுத்ததாக அடையும் இடம் மலைச்சிகரமான பபிபால். மிகவும் உயரமான இடம் என்பதால், மூச்சு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இங்கேயும் மருத்துவ உதவிகள் கிடைக்கும். 

அடுத்ததாக இறக்கமாக  6 கி.மீ. தூரம் நடந்து செல்வதற்கு சிரமமில்லாமல் இருக்கும்.  இந்தப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் உண்டு. கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அடுத்ததாக , " பதஞ்சனி கேம்ப்'பை அடையலாம். இங்கே ஓய்வெடுக்கலாம்.

இதற்கு அடுத்தது சங்கம் கேம்ப். பல பாதைகளில் இருந்து வந்தவர்கள் இங்கே சங்கமிப்பார்கள் என்பதால்தான் இந்தப் பெயர். இங்கே அனைத்து வசதிகளுடன்கூடிய சிறப்பு கேம்ப் உள்ளது. இங்கிருந்து சரியாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குகைக்கோயில் உள்ளது.

குகைக்கோயிலை அடந்தால்,  சிவனைத் தரிசிக்கலாம். 

மத நல்லிணக்கத்துக்கான அடையாளம்

சிவனை இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமிய மக்களும் தரிசிக்கின்றனர்.  மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகத் திகழும் அமர்நாத் குகைக் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் நிலச் சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், விரைவிலேயே புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது.

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரிகர்களுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான உறவு ஆழமானது. அமர்நாத் குகைக்கோயிலை புடே மலிக் என்ற இஸ்லாமியரான சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்தார். பக்தர்களை  உற்சாகப்படுத்த காஷ்மீரி நாட்டுப்புறப் பாடல்களை உள்ளூர் முஸ்லிம்கள் பாடுகின்றனர்.

""பக்தர்களை எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வோம். உணவு, நீர், பானங்கள் குடிக்கக் கொடுப்போம். அமர்நாத் குகைக்கோயிலுக்கு அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வோம். தரிசனம் முடிந்தபிறகு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து நன்றி சொல்லிவிட்டு செல்வார்கள். அமர்நாத் யாத்ரீகர்களுடன் இப்படிப்பட்ட சமூகமான உறவை நாங்கள் காலம்காலமாக பேணி காப்போம்'' என்கின்றனர் உள்ளூர் முஸ்லிம் பிரமுகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com