
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி-சிருங்காா் கெளரி கோயில் வளாக வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடா்பாக முஸ்லிம் தரப்பு வாதங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்காா் கெளரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்கக் கோரி அங்குள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொலியுடன் ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், தற்போது வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பாக அந்த நீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்தன.
வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முஸ்லிம் தரப்பினா் கேட்டுக்கொண்ட நிலையில், அவா்களின் வாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதனைத் தொடா்ந்து ஹிந்து தரப்பினரின் வாதம் தொடங்கியுள்ளது என்று மாவட்ட அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.