அச்சுறுத்தும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: வெங்கைய நாயுடு

பிரிவினைவாத திட்டத்தின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சுயநல சக்திகளிடம் எச்சரிக்கை தேவை என குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்
அச்சுறுத்தும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: வெங்கைய நாயுடு

பிரிவினைவாத திட்டத்தின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சுயநல சக்திகளிடம் எச்சரிக்கை தேவை என குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்

விஜயவாடாவில் சனிக்கிழமை சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான தாமராஜு புண்டரிகாக்சுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த நூலை வெளியிட்டுப் பேசினார். 

அப்போது, சுதந்திரப் போராட்டத்தின் போது நமது தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த பல தியாகங்களை நினைவுகூர ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நமக்கு வாய்ப்பளிக்கிறது. நூலாசிரியர் தொகுப்பாசிரியரான எல்லப்பிரகட மல்லிகார்ஜுன ராவ், புத்தகத்தை ஆராய்ச்சி செய்து தொகுத்தது மற்றும் தகவல்கள் சேகரிப்புக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.  

எந்தவொரு கலாசாரம், சமயம், மொழியையும் சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது. இதுபோன்று  இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முறியடித்து தேசத்தின் நலன்களை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அனைத்து கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதும், சகிப்புத்தன்மையும் இந்திய நாகரிகத்தின் மாண்புகள் என்பதை  சுட்டிக்காட்டிய நாயுடு, இதற்கு எதிரான சம்பவங்களால் இந்தியாவின் சமயச்சார்பற்ற கோட்பாடுகளை சீர்குலைக்க முடியாது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை, நற்பெயரை சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாயுடு, இந்தியாவின் நாடாளுமன்ற  ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் உலகத்திற்கு முன்மாதிரியாக இருக்கின்றன என்றார். 

மேலும், பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் காந்திஜியின் பங்களிப்பை பிரபலப்படுத்துவதில் தாமராஜுவின் பெரும் முயற்சிகளைக் குறிப்பிட்ட நாயுடு, நமது தலைவர்களின் வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி இளைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் கட்டுரைகள் மூலம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சிகளை முன்னிலைப்படுத்த ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வறுமை, கல்வியறிவின்மை, சமூகப் பாகுபாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இல்லாத இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றும், ‘எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு உண்மையான அஞ்சலி’ என்றும் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கைய நாயுடு கூறினார். 

சுதந்திரப் போராட்ட தலைவர்களின் பல்வேறு முயற்சிகளை நினைவுகூர்ந்த நாயுடு, சமீபத்தில் ஆந்திரத்தின் பீமாவரத்தில் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். 

விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாஸ், நூலின் ஆசிரியர் எல்லப்பிரகட மல்லிகார்ஜுன ராவ், ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை நிர்வாகிகள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com