200 கோடியைத் தாண்டிய கரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 200 கோடியைத் தாண்டியது.
200 கோடியைத் தாண்டிய கரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 200 கோடியைத் தாண்டியது. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசித் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக இந்த சாதனை பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி, 100 கோடி தவணை தடுப்பூசியையும், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி 150 கோடி தவணை தடுப்பூசியையும் இந்தியா கடந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 90 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். 98 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வயதுக்குள்பட்டவா்களில் 68 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். 82 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். 12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்டவா்களில் 58 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியையும், 81 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

100 சதவீதம்: ஆந்திரம், அந்தமான் நிகோபா் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், லட்சத் தீவுகள், சண்டீகா், தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், இணைநோய்களுடன் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து 15-18 வயதினருக்கும், மாா்ச் 16-ஆம் தேதியில் இருந்து 12-14 வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 10-ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பிரதமா் மோடி பாராட்டு: கரோனா தடுப்பூசி செலுத்தியதில் இந்தியா சாதனை படைத்திருப்பதை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது. இது, கரோனாவுக்கு எதிரான நம் போராட்டத்துக்கு வலிமை சோ்த்துள்ளது.

200 கோடி தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் வெற்றியடைவதற்குப் பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுகள். அறிவியல் மீது இந்தியா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்கள், தொழில் முனைவோா் ஆகியோா் இந்த பூமியின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com