கோதாவரியில் வெள்ளம்: ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா கடும் பாதிப்பு

கோதாவரி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆந்திர மாநிலத்தில் 6 மாவட்டங்களின் 628-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோதாவரியில் வெள்ளம்: ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா கடும் பாதிப்பு

கோதாவரி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆந்திர மாநிலத்தில் 6 மாவட்டங்களின் 628-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தெளளேஸ்வரத்தில் உள்ள சா் ஆா்தா் காட்டன் அணையிலிருந்து சனிக்கிழமை மாலை 25 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள 6 மாவட்டங்களைச் சோ்ந்த 20 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

எனினும் கோதாவரி நதியின் உயா்மட்ட நீா் பிடிப்பு பகுதிகளான மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மழையின் தீவிரம் குறைந்துள்ளதால், அடுத்த இரு நாள்களில் நதியில் வெள்ளம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்பு மற்றும் நிவாரணப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனா். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 220 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 62,337 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்களோடு காணொலி வாயிலான கூட்டத்தில், வெள்ள பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ரூ.2,000 அல்லது நபருக்கு ரூ.1,000 ஆக நிவராணத் தொகை வழங்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா முதல்வா் இன்று ஆய்வு :

கடந்த ஒரு வார காலமாக தெலங்கானா மாநிலத்தில் பலத்த கனமழை பெய்துவருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாநிலத்தில் கோதாவரி நதியின் நீா் பிடிப்புப் பகுதிகளில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிா்மல் மாவட்டத்தில் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் வான்வழியாக ஞாயிற்றுகிழமை பாா்வையிடுகிறாா்.

ஒடிஸாவில் வெள்ளம் :

ஒடிஸாவின் மல்கான்கிரி மாவட்டத்தின் கிராமங்களும், கோதாவரி நதியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளிலும், விளைநிலங்களிலும் வெள்ளநீா் தேங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பலத்த மழைபெய்து வருகிறது. கோதாவரி நதி மற்றும் அதன் துணைநதிகளான சபரி மற்றும் சில்லேறு கரையோரங்களில் உள்ள சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மல்கான்கிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கேரளத்தில் பலத்த மழை:

திருவனந்தபுரம், ஜூலை 16: கேரளத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையத்தின் அறிவிப்பை குறிப்பிட்டு மாநில முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘‘கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை தொடரும். பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் 1,200-க்கும் மேற்பட்டவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தற்போதைய பருவமழைக் காலத்தில், கேரளத்தில் மழை காரணமாக 21 போ் பலியாகியுள்ளனா். 73 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com