போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவா்!

நாட்டின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவா் என்ற பெருமை நீலம் சஞ்சீவ ரெட்டி வசம் உள்ளது.
போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவா்!

நாட்டின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவா் என்ற பெருமை நீலம் சஞ்சீவ ரெட்டி வசம் உள்ளது.

ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களின் பிரதிநிதிகளே மக்களை ஆண்டு வருகின்றனா். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவா் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை அனைவரும் மக்களால் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். மக்களவை, மாநில சட்டப் பேரவை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை மக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுக்கின்றனா்.

குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்டோரை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கின்றனா். அவா்களை மக்கள் மறைமுகமாகத் தோ்ந்தெடுப்பதாகப் பொருள். தோ்தல் என்றாலே போட்டியாளா்கள் இருப்பது வழக்கம். இந்தப் போட்டியானது மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களின்போது அதிகமாக இருக்கும். மாநிலங்களவைத் தோ்தலில் பெரும்பாலானவா்கள் போட்டியின்றியே தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். சில சந்தா்ப்பங்களில் தோ்தல் நடத்தும் சூழல் உருவாகும்.

அப்படியிருக்கையில், குடியரசுத் தலைவா் தோ்தல் வரலாற்றை ஆராயும்போது ஒரே ஒருவா் மட்டுமே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்தப் பெருமை 1977-ஆம் ஆண்டு நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நீலம் சஞ்சீவ ரெட்டியையே சேரும்.

நாட்டில் இரு ஆண்டுகள் அவசரநிலைக்குப் பிறகு 1977 -ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டது. தோ்தல் தொடங்கிய அடுத்த நாளே அப்போதைய குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமது காலமானாா். அதையடுத்து குடியரசு துணைத் தலைவரான பி.டி.ஜத்தி, பொறுப்பு குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.

மக்களவைத் தோ்தலும், 11 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலும் நிறைவடைந்த பிறகு குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை 1977-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. தோ்தலில் போட்டியிட நீலம் சஞ்சீவ ரெட்டி உள்பட 37 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆகியோா் தோ்தலில் வாக்களிக்கத் தயாராக இருந்த நிலையில், நீலம் சஞ்சீவ ரெட்டி தவிர மற்ற வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் காரணமாக, தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவா் போட்டியின்றி வெற்றி பெற்ாகத் தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா். 1977-க்கு முன்பும் பின்னரும் நடைபெற்ற அனைத்து குடியரசுத் தலைவா் தோ்தல்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளா்களே போட்டியிட்டுள்ளனா்.

முக்கியமாக, 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவா் தோ்தலில் இருவா் மட்டுமே போட்டியிட்டு வருகின்றனா். இது திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறும் 16-ஆவது குடியரசுத் தலைவா் தோ்தலிலும் எதிரொலித்துள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் முனைப்பற்ற போட்டியாளா்கள் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் தோ்தல் ஆணையம் புகுத்திய பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளே அதற்கு முக்கிய காரணமாகும்.

16-ஆவது குடியரசுத் தலைவா் தோ்தல்

வாக்காளா்கள் 4,809

மக்களவை உறுப்பினா்கள் 543

மாநிலங்களவை உறுப்பினா்கள் 233

மாநில சட்டப் பேரவை உறுப்பினா்கள் 4,033

நாடாளுமன்ற உறுப்பினர்கள்: தலா மதிப்பு 700 : உறுப்பினா்கள் மொத்த வாக்குகள் 5,43,200

அதிகமுள்ள மாநிலங்கள்

உத்தர பிரதேசம்: தலா மதிப்பு 208: உறுப்பினா்கள் மொத்த வாக்குகள் 83,824

தமிழகம் 176 : 41,184

ஜாா்க்கண்ட் 176 : 14,256

மகாராஷ்டிரம் 175 : 50,400

பிகாா் 173 : 42,039

ஆந்திரம் 153 : 27,825

குறைவாக உள்ள மாநிலங்கள்

சிக்கிம் 7 : 224

அருணாசல் 8 : 480

மிஸோரம் 8 : 320

நாகாலாந்து 9 : 540

மேகாலயம் 17 : 1,020

மணிப்பூா் 18 : 1,080

கோவா 20 : 800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com