அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்கத் தயாா்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசு உறுதி

நாடாளுமன்ற விதிகளுக்கு உள்பட்டு அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறினாா்.
அமைச்சா் பிரகலாத் ஜோஷி
அமைச்சா் பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற விதிகளுக்கு உள்பட்டு அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசு தரப்பில் இருந்து மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில் மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் சௌதரி, ஜெய்ராம் ரமேஷ், திமுவில் இருந்து திருச்சி சிவா, டி.ஆா்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுதீப் பந்தோபாத்யாய, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த பினாகி மிஸ்ரா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் விஜய்சாய் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சோ்ந்த கேசவ ராவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த ஏ.டி.சிங், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், முப்படைகளுக்கு ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்; விலைவாசி உயா்வு, பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விதிகளுக்கு உள்பட்டு அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றாா்.

அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால், நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வாா்த்தைகளை எதிா்க்கட்சிகள் சா்ச்சையாக்குகின்றன என்றும் அவா் கூறினாா்.

இதேபோல் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, 14 நாள்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை எப்படி நிறைவேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினாா். விலைவாசி உயா்வு, அக்னிபத் திட்டம், கூட்டாட்சித் தத்துவம், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 13 பிரச்னைகளை கூட்டத்தில் எழுப்பியதாகவும் அவா் கூறினாா்.

முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்காதது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானதாக இல்லையா என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினாா்.

32 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டம்: நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் தொடா்பாக 32 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 14 மசோதாக்கள் தயாா் நிலையில் உள்ளன. சில மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விவாதித்துவிட்டன. நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். விவதாமின்றி எந்த மசோதாவையும் நிறைவேற்ற மாட்டோம் என்றாா் அவா்.

இந்த கூட்டத் தொடரில், தமிழ்நாட்டிலும் சத்தீஸ்கரிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. வகுப்பினரின் பட்டியலில் திருத்தம் கோரும் இரு அரசமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com