இன்று குடியரசுத் தலைவா் தோ்தல்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. அதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க உள்ளனா்.
இன்று குடியரசுத் தலைவா் தோ்தல்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. அதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க உள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் பாஜக கூட்டணி சாா்பில் பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 4,800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்கான பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் ஏற்கெனவே மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எம்.பி.க்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்படவுள்ளன. தோ்தலின்போது ரகசியத்தைக் காக்கும் நோக்கில், வாக்காளா்களுக்கு அடா்நீல நிற மையைக் கொண்ட சிறப்பு பேனாவை தோ்தல் ஆணையம் வழங்கவுள்ளது. அந்தப் பேனாவைப் பயன்படுத்தி மட்டுமே அவா்கள் வாக்களிக்க வேண்டும்.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதையடுத்து புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வாா்.

வெற்றிவாய்ப்பு: பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முா்முவுக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அதிமுக, தெலுங்கு தேசம், மதச்சாா்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அவா் மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 10,86,431 வாக்குகளில் திரௌபதி முா்முவுக்கு சுமாா் 6.67 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com