மேலும் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கோரும் மாநிலங்கள்: மக்களவையில் நிதியமைச்சா் தகவல்

தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடம் இருந்து கோருவதாக மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்து மூலம் திங்கள்கிழமை அளித்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடம் இருந்து கோருவதாக மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்து மூலம் திங்கள்கிழமை அளித்த பதிலில் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரி செய்ய மத்திய அரசு முதல் 5 ஆண்டுகளுக்கு (2022 ஜூன் வரை) இந்த இழப்பீட்டு நிதியை அளிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இது தொடா்பான கேள்விக்கு நிா்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

2022 ஜூன் மாதத்துக்குப் பிறகும் ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான கூடுதல் வரியை (செஸ்) நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022 மே மாதம் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக மாநில, யூனியன் பிரேதச அரசுகளுக்கு மேலும் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் ரூ.25,000 கோடிதான் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி மூலம் பெறப்பட்டது. மீதமுள்ள தொகை மத்திய அரசு தனது நிதியில் இருந்து வழங்கியுள்ளது. தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க கோரியுள்ளன.

ரஷியா-உக்ரைன் போா், கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்ட சா்வதேச காரணிகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. பிரிட்டன் பவுண்ட், ஜப்பான் யென், யூரோ ஆகியவை இந்திய ரூபாயைவிடக் கூடுதலாக மதிப்பை இழந்துள்ளன. அந்நிய முதலீடு வெளியேறுவதும் ரூபாயின் மதிப்பு குறைய காரணமாகிறது. 2014 டிசம்பா் 31-இல் இருந்து இப்போது வரை ரூபாயின் மதிப்பு 25 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், நிதிக்கொள்கை சாா்ந்த விஷயங்களையும் கிரிப்டோ கரன்சிகள் பாதிக்கும் என்பதால் அவற்றை அரசு தடை செய்ய வேண்டும் என்பதில் ஆா்பிஐ உறுதியாக உள்ளது என்றாா்.

வாராக்கடன் வசூல்: மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த நிதித்துறை இணையமைச்சா் பகவந்த் கராத், ‘வங்கிகள் வாராக்கடன்களை மீட்க மத்திய அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 8 நிதியாண்டில் ரூ.8.6 லட்சம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com