அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: நிதியமைச்சா் விளக்கம்

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், பருப்புகள், கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு
அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: நிதியமைச்சா் விளக்கம்

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், பருப்புகள், கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன் உணவு தானியங்களுக்கு விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரியை மாநிலங்கள் விதித்திருந்தன. எனவே, இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்’ என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கண்ட 5 சதவீத ஜிஎஸ்டி திங்கள்கிழமை முதல் அமலான நிலையில், மத்திய அரசு மீது பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ட்விட்டரில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நாட்டில் நடைமுறையில் இருந்த 17 வகையான வரிகளை ஒருங்கிணைத்து, கடந்த 2017, ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அப்போது, வணிகப் பெயருடைய தானியங்கள், பருப்புகள், மாவு உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களை, பிரபல உற்பத்தி நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியதால், அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது. இதனை தடுக்கும் வகையில், பண்டல் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் ஒரே சீராக ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று விநியோகஸ்தா்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

விரிவான ஆலோசனை: இக்கோரிக்கைகள், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய கமிட்டியால் பலமுறை ஆராயப்பட்டு, அமைச்சா்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கா்நாடக முதல்வா் தலைமையிலான இக்குழு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளம், உத்தர பிரதேசம், கோவா, பிகாா் ஆகிய மாநிலங்களின் அமைச்சா்களை உள்ளடக்கியதாகும்.

ஒருமித்த முடிவு: இக்குழுவின் பரிந்துரைகள், ஜிஎஸ்டி கவுன்சிலால் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, முன்கூட்டியே பண்டல் செய்யப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டப்பட்ட உணவு தானியங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அரிசி, கோதுமை, ஓட்ஸ், ரவை உள்ளிட்டவை பண்டல் செய்யப்படாமல் விற்கப்படும்போது, அவற்றுக்கு எந்த ஜிஎஸ்டி வரியும் கிடையாது.

ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், பாஜக அரசு அல்லாத பஞ்சாப், சத்தீஸ்கா், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களும் தங்கள் முழு ஒப்புதலை வழங்கியுள்ளன.

ஜிஎஸ்டி-க்கு முந்தைய நிலவரம்: மேற்கண்ட உணவு தானியங்களுக்கு வரி விதிக்கப்படுவது இதுதான் முதல்முறையா? இல்லை. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன் உணவு தானியங்களுக்கு விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரியை மாநிலங்கள் விதித்திருந்தன. அந்த வகையில், உணவு தானியங்கள் மீதான கொள்முதல் வரி மூலம் பஞ்சாப் ரூ.2,000 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. உத்தர பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், பிகாா் ஆகிய மாநிலங்கள் அரிசிக்கு மதிப்புக் கூட்டு வரி விதித்திருந்தன.

வரி இழப்பைத் தடுக்க அவசியம்: பண்டல் செய்யப்பட்ட தானியங்கள், பருப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி, வரி இழப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிக அவசியமான முடிவு. இந்த விஷயத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com