சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்

சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்

சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
 மாநில சுற்றுசூழல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் பிரதமரை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிரதிநிதியாகச் சென்ற தமிழக அமைச்சருடன் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி ஆகியோரும் சென்று அழைப்பிதழை வழங்கினர்.
 தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பிரதமரிடம் அழைப்பிதழை வழங்கினார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தமிழக அரசின் பிரசார சின்னத்தை ("தம்பி') அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் பிரதமருக்கு பரிசாக அளித்தார்.
 மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பிதழை வழங்கினார். மத்திய செய்தி, ஒலிபரப்பு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா சென்றார்.
 மத்திய உள்துறை மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் நிஷித் பிரமாணிக்கிற்கும் அமைச்சர் மெய்யநாதன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ. கே.எஸ்.விஜயன் உடன் சென்றார்.
 வரும் 28-ஆம் தேதி மாலையில் சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியால் தொடக்கி வைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்குர், எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com