
ஐடிபிஐ வங்கி ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.756 கோடியாக இருந்தது.
எல்ஐசி-கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அந்த வங்கி இதுகுறித்து வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:
நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி செயல்பாட்டின் மூலமாக மொத்தம் ரூ.5,780.99 கோடி வருமானம் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.6,554.95 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும்.
இருப்பினும் வாராக் கடன் குறைந்ததையடுத்து, கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.603.30 கோடியிலிருந்து 25 சதவீதம் அதிகரித்து ரூ.756 கோடியானது.
2022 ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 22.71 சதவீதத்திலிருந்து 19.90 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 1.67 சதவீதத்திலிருந்து சரிந்து 1.25 சதவீதமானது என ஐடிபிஐ தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...