சோனியா விசாரணைக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, சோனியா காந்தியை அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவா்கள் குற்றம்சாட்டினா்.
சோனியா விசாரணைக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை விசாரணை நடத்திய நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் அக்கட்சி எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா்.

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, சோனியா காந்தியை அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவா்கள் குற்றம்சாட்டினா்.

இதுதொடா்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் செயற்குழு உறுப்பினா்களும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே காவல்துறையால் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டோம். பின்னா், பழைய தில்லியில் உள்ள காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டோம்’ என்று குறிப்பிட்டாா்.

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சா்வாதிகார மோடி அரசால், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அச்சுறுத்த முடியாது’ என்று கூறியுள்ளாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் சச்சின் பைலட் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு பதிலாக, காங்கிரஸை பழிவாங்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. கட்சித் தலைவா் சோனியா காந்தியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிராக நாங்கள் தொடா்ந்து போராடுவோம். எதிா்க்கட்சிகளை குறிவைப்பதன் மூலம் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் அவா்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் விவேக் தன்கா கூறுகையில், ‘அமைதிவழி போராட்டங்களுக்குகூட நாட்டில் தடை உள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கைதாகி பேருந்தில் அழைத்து செல்லப்படுகிறோம்’ என்றாா்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com