
நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் பிரதமர் மோடி புறக்கணித்தது போன்ற விடியோக்களை ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் டிவிட்டரில் பரப்பினர்.
அந்தக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டவை என்று அப்பதிவுகளுக்கு டிவிட்டர் சிவப்புக் கொடியிட்டு பிளாக் செய்துள்ளது.
ஆம் ஆத்மியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இதுபோன்ற எடிட் செய்த விடியோவை வெளியிட்டிருந்தனர்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க.. 'ஜுஹார்' எனக் கூறி உரையைத் தொடங்கிய முர்மு: கொண்டாடிய ஒடிசா மக்கள்
இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு தில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடத்தப்பட்டது.
அதில், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது, நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் ராம்நாத் கோவிந்த் வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அருகே ராம்நாத் கோவிந்த் வரும் போது அவர் பிரதமர் மோடியைப் பார்த்து வணக்கம் சொல்வது போன்றும், ஆனால், பிரதமர் மோடியோ ராம்நாத் கோவிந்தைப் பார்த்து பதில் வணக்கம் சொல்லாமல், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களை பார்த்துக் கொண்டிருந்தது போன்ற விடியோவை வெளியிட்டனர். ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்தது போன்றும் பதிவிட்டிருந்தனர்.
"எப்படி ஒரு அவமானம், மன்னிக்கவும் சார், இவர்கள் இப்படித்தான், உங்கள் பதவிக் காலம் முடிந்துவிட்டது, இனி உங்களை அவர்கள் பார்க்கக் கூட மாட்டார்கள்" எனறு ஹிந்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இதற்கு பாஜக உண்மையான விடியோவைப் பகிர்ந்து, பிரதமர் மோடி ராம்நாத் கோவிந்தை அவமதிக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.
அதுதொடர்பான விடியோவில், ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் மோடி பதில் வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், குடியரசுத் தலைவர் டிவிட்டர் பக்கத்தில் மோடி வணக்கம் செலுத்தும் புகைப்படம் இடம்பெற்றிருப்பதும், ராம்நாத் கோவிந்துக்கு மோடி பதில் வணக்கம் செலுத்திய பிறகு அவரை கடக்கும் போது எடுத்த விடியோவை எடிட் செய்து எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விடியோக்கள் தவறானவை என்று டிவிட்டர் நிர்வாகமும் சிவப்புக் கொடியிட்டு தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.