‘விக்ராந்த்’ போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

 உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
‘விக்ராந்த்’ போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

 உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ராந்த் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. திட்டமிட்டதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போா்க் கப்பலை கடற்படையிடம் கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

விமானம்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

விக்ராந்த் போா்க் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நான்காம் மற்றும் இறுதிக்கட்ட வெள்ளோட்ட பரிசோதனை நடவடிக்கைகள் 3 வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இந்நிலையில், விக்ராந்த் விமானம்தாங்கி போா்க் கப்பல் கடற்படையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அக்கப்பல் விரைவில் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இத்துடன் விமானம்தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டும் வலிமை கொண்ட ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்ராந்த் விமானம்தாங்கி போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிகழ்வு சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

நாட்டின் வலிமை அதிகரிப்பு:

கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐஏசி விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அக்கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. இது ‘தற்சாா்பு இந்தியா’ கொள்கைக்கான சிறந்த உதாரணமாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

விக்ராந்த் போா்க் கப்பலின் சிறப்பம்சங்கள்:

நீளம் 262 மீட்டா்

அகலம் 62 மீட்டா்

உயரம் 59 மீட்டா்

டா்பைன்களின் எண்ணிக்கை 4

என்ஜின் திறன் 88 மெகா வாட்

அதிகபட்ச வேகம் மணிக்கு 28 நாட் (சுமாா் 52கி.மீ.)

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு சுமாா் 7,500 கடல்மைல்

இயக்கவல்ல போா் விமானங்கள் மிக்-29கே, கமோவ்-31 உள்ளிட்டவை

இயக்கவல்ல ஹெலிகாப்டா்கள் எம்ஹெச்-60ஆா், இலகுரக ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை

அறைகளின் எண்ணிக்கை சுமாா் 2,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com