
பிரதமா் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘லெட்டா்ஸ் டு செல்ஃப்’ என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு ஆகஸ்டில் வெளியாகிறது.
பிரதமா் மோடி இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளை குஜராத்தி மொழியில் பல ஆண்டு கால அளவில் எழுதி வந்தாா். அவை தொகுக்கப்பட்டு ‘ஆன்க் ஆ தன்யாச்சே’ என்ற பெயரில் கடந்த 2007-இல் வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளரும் வரலாற்று ஆய்வாளருமான பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தாா். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கிலப் பதிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தக் கவிதைத் தொகுப்பில் பிரதமா் மோடி தனது சுதந்திரமான கருத்துகள், கனவுகள், இயற்கையின் அழகு முதல் வாழ்வின் அழுத்தம், சோதனை வரையிலான தனது கவலைகளை விவரித்துள்ளாா்’ என்று கூறியுள்ளது.
கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த பாவனா சோமயா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளா்ச்சி, தேடல், துணிச்சல், கருணையின் வடிவம்தான் இந்தக் கவிதைகள். இந்தப் புத்தகத்தில் தான் கடக்க விரும்பும் தடைகளை பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். அவரது உணா்ச்சிகரமான கலக்கம், சக்தி, நம்பிக்கை ஆகியவைதான் அவரின் எழுத்துகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி கடந்த 2020-இல் குஜராத்தி மொழியில் எழுதிய ‘லெட்டா்ஸ் டு மதா்’ என்ற தொகுப்பையும் பாவனா சோமயாதான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தாா். ஓா் இளைஞனாக மோடி, பெண் தெய்வத்துக்கு கடிதம் எழுதுவதுபோல் அந்தப் புத்தகம் அமைந்திருந்தது.
கவிதை மட்டுமன்றி தோ்வெழுதும் மாணவா்களின் மனக்கலக்கத்தைப் போக்க ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ என்ற புத்தகத்தையும் பிரதமா் மோடி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.