தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன் 9 வரை அமலாக்கத் துறை காவல்

பணமோசடி வழக்கில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன் 9 வரை அமலாக்கத் துறை காவல்

பணமோசடி வழக்கில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
அமலாக்கத் துறை   அவரை திங்கள்கிழமை கைது செய்தது.
தொடர்ந்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்பாக சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார். 
அவர் மேலும் வாதிடுகையில், "இந்த வழக்கில் மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் தொகை ரூ.4.81 கோடியுடன் நின்றுவிடவில்லை. பணம் அதை விட அதிகமானது. சில உண்மைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு தெரியும். இதுவரை அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின் போது,  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆகையால், பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய அவரது காவல் இன்றியமையாதது' என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.ஹரிஹரன், அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக்  கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கில் மிகப்பெரிய சதியை வெளிக்கொண்டுவர வேண்டுமாயின், சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறி, அவரை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com