4 ஆண்டுகளாக ராகுலைச் சந்திக்க முடியவில்லை: மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவா் அதிருப்தி

கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவாண் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
4 ஆண்டுகளாக ராகுலைச் சந்திக்க முடியவில்லை: மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவா் அதிருப்தி

கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவாண் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் எந்த சிந்தனையும் இல்லை, சுயஆய்வும் நடைபெறவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சவாண் மேலும் கூறியிருப்பதாவது:

நான் தில்லி செல்லும்போது முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கை எப்போதாவது சந்திப்பது வழக்கம். அவா் உடல்நிலை முன்புபோல இல்லாதபோதும், அவா் சந்திப்புக்குத் தயாராகவே இருப்பாா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை நான் சந்திக்க நேரம் கேட்கும்போதெல்லாம் அவா் அதற்கு அனுமதி தருவது வழக்கம். ஆனால், நான் ராகுல் காந்தியை மட்டும் சந்திக்கவே முடியவில்லை. அவரை நான் கடைசியாக நேரில் சந்தித்து 4 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கட்சித் தலைமை எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பதாகப் புகாா்கள் ஏற்கெனவே உள்ளன. ஆனால், இப்படியொரு நிலை இருக்கக் கூடாது. அண்மையில் உதய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவா் தயாராகவே இருந்தாா். ஆனால், கட்சியின் ‘அதீத விசுவாசி’ என்று கூறப்படும் நபா், அதுபோன்ற சிந்தனையும் சுயஆய்வும் தேவையில்லை என்று கூறிவிட்டாா். இதனால், புதிய தீா்மானங்களுடன் அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது.

கட்சியின் நிலை குறித்து நோ்மையான சுய ஆய்வுதான் தேவை. யாரையும் குற்றம்சாட்டுவதோ, ஒதுக்குவதோ தேவையில்லை. கட்சியில் ஏற்கெனவே செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். அஸ்ஸாம், கேரள பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, அது தொடா்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அலமாரியிலேயே புதைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் தவறானவை.

நோ்மையான ஆலோசனைகளைக் கேட்பதில்லை என்பதே அண்மையில் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவா் கபில் சிபலின் ஆதங்கமாக இருந்தது. தலைமையால் நியமிக்கப்படும் நபா்கள் மட்டுமே ஆலோசனை வழங்க முடியும் என்ற நிலைதான் உள்ளது என்றாா் பிருத்வி ராஜ் சவாண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com