சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா தீவிரம்

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘மண்ணைக் காப்போம் இயக்க’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, சத்குரு ஜக்கி வாசுதேவ்.
‘மண்ணைக் காப்போம் இயக்க’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, சத்குரு ஜக்கி வாசுதேவ்.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அதற்காக பெட்ரோலில் எத்தனால் கலப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் கூறினாா்.

மண்ணின் வளம் சீா்கெட்டு வருவதைத் தடுப்பதற்கான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ‘மண்ணைக் காப்போம் இயக்கம்’ முன்னெடுக்கப்பட்டது. அந்த இயக்கத்தை கடந்த மாா்ச்சில் தொடக்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், மண்ணைப் பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த 100 நாள்களுக்குள் 27 நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டாா்.

சா்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி மண்ணைக் காப்போம் இயக்கத்தின் 75-ஆவது நாளாகும். அதையொட்டி தில்லியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவே. அப்படியிருந்தும் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக தூய்மை இந்தியா திட்டம், ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருள்களை ஒழித்தல், பெட்ரோலில் எத்தனால் கலப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

வளா்ச்சியடைந்த நாடுகள் பூமியின் வளங்களைப் பெருமளவில் சுரண்டின. மேலும், அதிகப்படியான கரியமில வாயு வெளியேற்றத்திலும் அந்த நாடுகள் முக்கியப் பங்கு வகித்தன. சா்வதேச அளவில் ஒரு நபருக்கான சராசரி கரியமில வாயு உமிழ்வு ஆண்டுக்கு 4 டன்னாக உள்ள நிலையில், இந்தியாவில் அந்த அளவு 0.5 டன்னாக மட்டுமே உள்ளது.

இந்தியாவின் பங்களிப்பு: சுற்றுச்சூழலைக் காப்பதற்கு சா்வதேச அமைப்புகளுடன் இணைந்து நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகளுக்கான கூட்டமைப்பு, சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் உருவாக்கத்தில் இந்தியா முக்கியப் பங்கு வகித்துள்ளது.

பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பது 10 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இது 1.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது 10 சதவீத இலக்கு, நிா்ணயிக்கப்பட்ட அவகாசமான 5 மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், 27 லட்சம் டன் கரியமில வாயு உமிழ்வு குறைந்துள்ளது; ரூ.41,000 கோடி அந்நியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கவும் வழிசெய்துள்ளது.

வனப் பரப்பு அதிகரிப்பு: நாட்டின் மொத்த எரிசக்தி உற்பத்தியில் 40 சதவீதமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாகப் பெறப்படுகிறது. இந்த இலக்கு 9 ஆண்டுகள் முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தி 18 மடங்கு அதிகரித்துள்ளது. ஹைட்ரஜன் திட்டம், பழைய வாகனங்கள் உடைப்புக் கொள்கை உள்ளிட்டவை சுற்றுச்சூழலைக் காப்பதற்கான மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்துகின்றன.

நாட்டில் வனப் பரப்பு கடந்த 8 ஆண்டுகளில் 20,000 சதுர கி.மீ.-க்கு மேல் அதிகரித்துள்ளது. வன உயிரினங்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிகர கரியமில வாயு வெளியேற்றம் பூஜ்ஜியத்தை அடையும்.

மண்ணின் வளத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மண் வகை குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ளும் வசதிகள் முன்பு விவசாயிகளுக்குக் கிடைக்காமல் இருந்தது. அதைக் கருத்தில்கொண்டு மண் சுகாதார அட்டை திட்டத்தை அரசு செயல்படுத்தியது.

நாட்டில் பாயும் 13 பெரிய நதிகளைப் பாதுகாக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. நதிநீா் மாசடைவதைத் தடுக்கவும், நதிக்கரைகளில் மரங்கள் நடுவதை ஊக்குவிக்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் காரணமாக, கூடுதலாக 7,400 சதுர கி.மீ. வனப் பரப்பு உருவானது.

இயற்கை வேளாண்மையின் அவசியம்: சுற்றுச்சூழல் சாா்ந்து மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு இயற்கை வேளாண்மை பெரும் தீா்வாக அமையும். கங்கை நதிக்கரைகளில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது வேளாண் நிலங்களை ரசாயனப் பொருள்களில் இருந்து காப்பது மட்டுமல்லாமல், ‘கங்கையைக் காப்போம்’ திட்டத்தையும் வலுப்படுத்தும்.

நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டோ் புன்செய் நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் நன்செய் நிலங்களாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பிரதமா் கதிசக்தி’ திட்டத்தின் வாயிலாக போக்குவரத்து அமைப்பு வலுவடைந்து, மாசுபாடு பெருமளவில் குறையும். 100 நீா்வழித் தடங்களை ஒருங்கிணைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாசுபாடு குறைவதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றாா் பிரதமா் மோடி.

சா்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு

புது தில்லி, ஜூன் 5: சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை (லைஃப்)’ என்ற சா்வதேச இயக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தாா். சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவா் பில் கேட்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்போா், பூமிக்கு ஆதரவாகச் செயல்படுவோா் ஆவா். எதிா்காலத்தை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். ‘ஒரே பூமி, பல்வேறு முயற்சிகள்’ என்ற கொள்கையை மையமாகக் கொண்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

கரியமில வாயு சாராத வாழ்க்கை முறை குறித்து மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினாா். சுற்றுச்சூழல் சாா்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் வேளையில், நீடித்த வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் மனிதா்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com