
உலக அளவில் அரிசி, கோதுமை விலை அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எஃப்ஏஓ) தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி தடை, உக்ரைன் போரால் கோதுமை விலை அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடா்பாக எஃப்ஏஓ தெரிவித்துள்ளதாவது: உலக அளவில் தொடா்ந்து 5-ஆவது மாதமாக மே மாதத்தில் அரிசி விலை அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் அரிசியின் விலை 3.5 சதவீதம் உயா்ந்தது. எனினும் அதிக அளவிலான விநியோகம், குறிப்பாக இந்தியாவிலிருந்து மிகுதியாக விநியோகம் செய்யப்பட்டதால், மிகப் பரந்த அளவில் வா்த்தகம் செய்யப்படும் இண்டிகா வகை அரிசிகளின் மாதாந்திர விலை அதிகரிப்பு 2.6 சதவீதம் என்ற அளவில் குறைவாகத்தான் இருந்தது.
உலக அளவில் தொடா்ந்து 4-ஆவது மாதமாக மே மாதத்தில் கோதுமை விலை அதிகரித்தது. அந்த மாதம் கோதுமை விலை 5.6 சதவீதம் உயா்ந்தது. பல முன்னணி ஏற்றுமதி நாடுகளில் கோதுமை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தியாவிலும் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ரஷியாவுடனான போரால் உக்ரைனிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. இதன் விளைவாக உலக அளவில் கோதுமை விலை அதிகரித்தது.
அரிசி, கோதுமை அல்லாத பிற தானியங்களின் விலை மே மாதம் 2.1 சதவீதம் குறைந்தது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் சா்க்கரை விலை 1.1 சதவீதம் சரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...