

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வலைதளமான ஐஆா்சிடிசி (இந்தியன் ரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா கழகம்) ஒரு மாதத்துக்கான பயணச் சீட்டு முன்பதிவு எண்ணிக்கையை உயா்த்தி திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
ரயில்களில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் வகையிலும், தனது ஒரே வலைதள கணக்கிலேயே குடும்ப உறுப்பினா்களுக்கும் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையிலும் முன்பதிவு எண்ணிக்கையை ஐஆா்சிடிசி உயா்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காக மாதம் 6 ரயில் பயணச் சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற அளவை 12-ஆக உயா்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பயணி தனது ஒரே ஐஆா்சிடிசி கணக்கில் மாதம் 12 பயணச் சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பயணிகள் ஒரே கணக்கிலிருந்து மாதம் 24 பயணச் சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகள் ஆதாா் மூலமாக அவ்வப்போது ஆய்வுக்கும் உள்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.