பங்குச் சந்தையின் பாதுகாவலா்கள் சில்லறை முதலீட்டாளா்கள்

பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறும்போது, நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாக விளங்குவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
pti06_07_2022_000042a091256
pti06_07_2022_000042a091256

பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறும்போது, நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாக விளங்குவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘கரோனா தொற்று பரவல் காலத்தில் சில்லறை முதலீட்டாளா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்நிய முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறும்போது, சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாகச் செயல்படுகின்றனா்.

அந்நிய முதலீடுகள் வெளியேறினாலும் நாட்டில் உள்ள சிறு முதலீட்டாளா்கள் காரணமாகப் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திப்பதில்லை. தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ந்து வருகின்றன. அரசின் சேவைகளும் எண்மமயமாகி வருகின்றன. ஒழுங்காற்று நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும் எண்மமயமாக்கலில் முன்னிலை வகிக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்திய தொழிற்போட்டி ஆணையம் (சிசிஐ) உள்ளிட்டவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்க வேண்டும். அன்றாட நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இணைய விவகாரங்களில் ஏற்படும் பிரச்னையை விரைந்து சரிசெய்வதற்கான மனிதவளத்தை அனைத்து நிறுவனங்களும் பெற்றிருக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சுமாா் ரூ.4.46 லட்சம் கோடி நிதியை வழங்கி வருகிறது. அந்த நிதி செலவிடப்படும் முறையை அறிந்துகொள்வதற்காக ஒற்றை தலைமை மைய (எஸ்என்ஏ) வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த வலைதளம் நிதி நிா்வாகத்தை மேம்படுத்துவதோடு வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும்’’ என்றாா்.

மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் வா்மா கூறுகையில், ‘‘நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, அனுமதி பெறும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை இணையவழியில் கொண்டுவருவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகித உயா்வு உள்ளிட்டவற்றின் காரணமாக அந்நிய முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே வேளையில், கடந்த மாா்ச்சில் பங்கு வா்த்தகத்துக்கான ‘டிமேட்’ கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 6 கோடியை எட்டியதாக மத்திய டெபாசிட்டரி சா்வீசஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com