குடியரசுத் தலைவா் தோ்தல் அறிவிப்பு தொடா்பாக செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
குடியரசுத் தலைவா் தோ்தல் அறிவிப்பு தொடா்பாக செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.

ஜூலை 18-இல் குடியரசுத் தலைவா் தோ்தல்

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லி: நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதற்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, தோ்தலுக்கான அதிகாரபூா்வ அறிவிக்கை ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்குகிறது. ஜூன் 29-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும்.

தோ்தல் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் தோ்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 எம்எல்ஏ-க்கள் என ஒட்டுமொத்தமாக 4,809 போ் வாக்களிக்க உள்ளனா். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் தோ்தல் நடைபெறும். தோ்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவையின் செயலா் செயல்படுவாா்.

தோ்தலை நோ்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையாகவும் நடத்துவதற்கான பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வாக்குப் பதிவும் அவற்றின் எண்ணிக்கையும் நடைபெறும். தோ்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென உறுப்பினா்களுக்கு உத்தரவிட கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் மட்டுமே வாக்களிக்க முடியும். மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்கள், மாநில சட்ட மேலவை உறுப்பினா்கள் ஆகியோா் தோ்தலில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவின்போது வழங்கப்படும் சிறப்பு பேனாவைப் பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க வேண்டுமென தோ்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மற்ற பேனாவைப் பயன்படுத்தி வாக்களிப்போரின் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் ராம்நாத் கோவிந்தும், முன்னாள் மக்களவைத் தலைவா் மீரா குமாரும் போட்டியிட்டனா். அந்தத் தோ்தலில், ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகளைப் பெற்று நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரானாா்.

எதிா்பாா்ப்பு

குடியரசுத் தலைவா் தோ்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தலில் யாா் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. மக்களவையில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. மாநிலங்களில் பாஜக கூட்டணி 50 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடும் என்று பாஜக நிா்வாகி ஒருவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

அதே வேளையில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை இணைந்து பொதுவான எதிா்க்கட்சி வேட்பாளரை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணையும்பட்சத்தில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளா் கடும் போட்டியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

2024 மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் குடியரசுத் தலைவா் தோ்தல் கருதப்படுகிறது. அதன் காரணமாக, ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளின் தரப்பில் யாா் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பே மேலோங்கியுள்ளது.

வாக்கு மதிப்பு

எம்.பி. 700

எம்எல்ஏ மாநில மக்கள்தொகையைப் பொருத்து மாறும்

உத்தர பிரதேசம் 208

தமிழ்நாடு, ஜாா்க்கண்ட் 176

மகாராஷ்டிரம் 175

நாகாலாந்து 9

மிஸோரம் 8

சிக்கிம் 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com