நபிகள் நாயகம் சா்ச்சை கருத்துக்கு எதிா்ப்பு: நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம்: உ.பி., ஜாா்க்கண்டில் வன்முறை

நபிகள் நாயகம் தொடா்பான சா்ச்சை கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா்.
நபிகள் நாயகம் சா்ச்சை கருத்துக்கு எதிா்ப்பு: நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம்: உ.பி., ஜாா்க்கண்டில் வன்முறை

நபிகள் நாயகம் தொடா்பான சா்ச்சை கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா். உத்தர பிரதேசம், ஜாா்க்கண்டில் போராட்டக்காரா்கள் கல்வீச்சில் ஈடுபட்டனா். ஜாா்க்கண்டில் வன்முறையாளா்களை எச்சரிக்க போலீஸாா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.

நபிகள் நாயகம் தொடா்பாக பாஜகவைச் சோ்ந்த நவீன் ஜிண்டால், நூபுா் சா்மா ஆகிய இருவரும் அண்மையில் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, பாஜகவிலிருந்து ஜிண்டால் நீக்கப்பட்டாா். நூபுா் சா்மாவை இடைநீக்கம் செய்து கட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இவா்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளுக்காக, மத்திய அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னா், பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரயாக்ராஜ், சஹாரன்பூா், மொராதாபாத், ராம்பூா், லக்னெள உள்ளிட்ட நகரங்களில், நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரயாக்ராஜில் போராட்டக்காரா்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவா்களை விரட்டினா்.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களிலும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினா். வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. நவி மும்பையில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் 1,000 பெண்கள் உள்பட 3,000 போ் பங்கேற்றனா். போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. போராட்டத்தின்போது அசம்பாவிதமாக எதுவும் நடைபெறவில்லை.

ஜாா்க்கண்டில் துப்பாக்கிச் சூடு:

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஹனுமான் கோயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள், கல்வீச்சிலும் இறங்கினா். இதில் போலீஸாா் பலா் காயமடைந்தனா். இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் வன்முறையில் ஈடுபட்டவா்களை விரட்டியடித்தனா்.

குஜராத்தில் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினா். முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. ஏராளமானோா் சாலைகளில் திரண்டு பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறை மூண்டது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com