
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை இன்று ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பியிருந்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் உள்ளிட்டோரால் யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோா் உள்ளனர்.
இதையும் படிக்கலாம்: நாட்டில் கரோனாவுக்கு சிக்கிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,995 ஆக உயர்வு
அந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க ஜூன் 2-ஆம் தேதி ராகுல் காந்தியையும், ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தியையும் ஆஜராகுமாறு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. எனினும் தான் வெளிநாட்டில் இருப்பதால் வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார்.
அதன் அடிப்படையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.
விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ராகுல் காந்தி ஆஜராகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உள்பட மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.