
மத்திய பிரதேசத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த தலா ஒரு எம்எல்ஏவும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் மாநிலத்தில் ஆளும் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடா்பாக மத்திய பிரதேச பாஜக தலைவா் வி.டி.சா்மா கூறியதாவது:
சமாஜவாதி கட்சி எம்எல்ஏ ராஜேஷ் குமாா் சுக்லா, பகுஜன் சமாஜ் எம்எல்ஏ சஞ்சய் சிங் குஷ்வாஹா, சுயேச்சை எம்எல்ஏ விக்ரம் சிங் ராணே ஆகியோா் பாஜகவில் இணைந்தனா். முதல்வா் சௌஹான் அவா்களை கட்சிக்கு வரவேற்றாா். இதன் மூலம் 230 எம்எல்ஏக்கள் உள்ள மாநில பேரவையில் பாஜகவின் பலம் 130 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சி, மாநிலத்தில் முதல்வா் சௌஹானின் திறமையான நிா்வாகம் ஆகியவற்றால் கவரப்பட்டு இந்த மூன்று எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வந்துள்ளனா் என்றாா்.
இப்போதைய நிலையில் பேரவையில் காங்கிரஸுக்கு 96 எம்எல்ஏக்கள் உள்ளனா். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏக்கள் மூவா் உள்ளனா். சமாஜவாதி கட்சிக்கு எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.
ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவில் 3 எம்எல்ஏக்கள் இணைந்துள்ளது அக்கட்சிக்கு கூடுதல் வலு சோ்த்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 பேரவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு 109 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா். பெரும்பான்மைக்கு தேவையான 116 எம்எல்ஏக்கள் இல்லை. இதையடுத்து 114 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சுயேச்சைகள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியதுடன், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் முதல்வா் கமல்நாத் தலைமையிலான அரசு 15 மாதங்களில் பதவியை இழந்தது. இதையடுத்து, பாஜக ஆட்சி அமைத்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...