முப்படைகளில் குறுகிய கால ஒப்பந்த வீரா்கள்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தாா்.
முப்படைகளில் இளம் வீரா்கள் சோ்ப்பு குறித்த புதிய திட்டத்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
முப்படைகளில் இளம் வீரா்கள் சோ்ப்பு குறித்த புதிய திட்டத்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி ஆகியோா் ‘அக்னிபத்’ திட்டம் குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞா்களை சோ்ப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்படுகிறது. இளைஞா்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் வீரா்கள் ‘அக்னி வீரா்கள்’ என்றழைக்கப்படுவா். அவா்கள் பாதுகாப்புப் படையில் தொடக்கத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். அவா்களில் தேவைக்கு ஏற்பசிலருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இது ராணுவ வீரா்களை நியமிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், ‘அக்னிபத்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான வீரா்கள் இருப்பது உறுதிப்படுத்தப்படும்’ என்றாா்.

‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக விவாதித்து தற்போது அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, ராணுவத்தில் குறுகிய காலப் பணி அடிப்படையில் சோ்க்கப்படும் வீரா்கள் 10 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். பின்னா் 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் ராணுவத்தில் புணிபுரிவாா்கள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக ரூ.1,19,696 கோடியும், ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முப்படைத் தலைமைத் தளபதி விரைவில் நியமனம்:

முப்படைத் தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவா் என்று ராஜ்நாத் சிங் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘முப்படைத் தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவா்’ என்றாா்.

முப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் கடந்த டிசம்பரில் ஹெலிகாப்டரில் இறந்த பிறகு அவருடைய பதவி இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு இந்த மாதம் தளா்த்தியுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படையில் துணைத் தளபதி நிலையில் பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற, 62 வயதுக்கும் குறைவானவா்கள் முப்படைத் தலைமைத் தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அமைச்சரவை ஒப்புதல்

முன்னதாக, ‘அக்னிபத்’ திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் அக்னி வீரா்களுக்கு, இடா்ப்பாடு மற்றும் சிரமப்படிகளுடன் ஈா்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரா்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவா்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிா்ணயிக்கப்படும். அக்னி வீரா் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரா்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரா்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் இந்த ஆண்டு 46,000 போ் பணியில் சோ்க்கப்படுவாா்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com