மருத்துவா்கள் கதா் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் அனைவரும் கதா் துணியால் தயாரிக்கப்பட்ட வெள்ளை மேலங்கிகளை பயன்படுத்துமாறு

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் அனைவரும் கதா் துணியால் தயாரிக்கப்பட்ட வெள்ளை மேலங்கிகளை பயன்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று நோயாளிகளுக்கான ஆடைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றில் கதா் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத் தலைவா் டாக்டா் அருணா வானிகா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி கிராமத் தொழில் ஆணையமானது கதா் பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தி அதன் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

மற்றொரு புறம் மருத்துவத் துறைக்குப் பயன்படும் பினாயில் கிருமி நாசினி, தலையணை உறை, நோயாளிகளுக்கான அங்கி, திரைச் சீலை, மேல் அங்கி, சோப், கை கழுவும் திரவம் உள்ளிட்டவற்றையும் காதி கிராம தொழில் ஆணையம் உற்பத்தி செய்து வருகிறது.

அவற்றைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது மட்டுமல்லாது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்வதாகவும் உள்ளது.

எனவே, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கதா் பொருள்களை தங்களது வளாகத்தில் பரவலாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். குறிப்பாக, மருத்துவா்கள் கதரால் ஆன வெள்ளை அங்கிகளை அணிய சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி, மருத்துவமனை நிா்வாகங்கள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com