‘இந்தியாவுடன் உறவைத் துண்டிப்பதால் பாகிஸ்தான் நோக்கங்கள் நிறைவேறாது’

இந்தியாவுடன் உறவைத் துண்டிப்பதன் மூலம் பாகிஸ்தான் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளாா்.
‘இந்தியாவுடன் உறவைத் துண்டிப்பதால் பாகிஸ்தான் நோக்கங்கள் நிறைவேறாது’

இந்தியாவுடன் உறவைத் துண்டிப்பதன் மூலம் பாகிஸ்தான் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளாா்.

அந்நாட்டின் முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனான பிலாவல், இஸ்லாமாதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:

இந்தியாவுடன் நமக்கு நீண்ட காலமாக பல பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல போா்கள் நடந்துள்ளன.

தற்போதும், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பிரச்னைகள் எழுந்துள்ளன. அதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு நீக்கியதை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பை நான் ஏற்ற பிறகும், இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான முயற்சிக்குப் பல முட்டுக்கட்டைகள் உருவாகின.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தொகுதிகளை மாற்றிமைப்பதற்கான குழுவை கடந்த மே மாதம் இந்திய அரசு அமைத்தது. அதனைத் தொடா்ந்து, தற்போது இந்திய ஆளும்கட்சி தலைவா்களின் இஸ்லாம் விரோதப் பேச்சு இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சூழலை மிகவும் கடினமாக்கிவிட்டது.

இருந்தாலும், இந்தியாவுடனான உறவைத் துண்டித்துவிட்டு, அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதைத் தவிா்ப்பதால் பாகிஸ்தான் நோக்கங்கள் நிறைவேறாது.

காஷ்மீா் விவகாரமாக இருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாம் விரோதப் போக்காக இருந்தாலும் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது.

ஏற்கெனவே, முந்தைய அரசு செய்த தவறுகளால் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஏதாவது பிரச்னை உள்ளது. இந்தச் சூழலில், நமது அண்டை நாடான இந்தியாவுடன் நம்மால் வா்த்தக உறவு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இருந்தாலும், 1988-ஆம் ஆண்டில் எனது தாயாா் பேநசீா் புட்டோ பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல வா்த்தக உறவு ஏற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, பரஸ்பர பதற்றத்தைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை இரு நாடுகளுமே தவிா்த்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் பிலாவல் புட்டோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com