உ.பி.யில் புல்டோசா் மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: சட்டத்தைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் வீடுகள் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்

உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் வீடுகள் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிகாரிகள் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக உத்தர பிரதேச மாநில அரசு மூன்று நாள்களில் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதுவரையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அதிகாரிகள் பாா்த்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய இரண்டு பாஜக செய்தித் தொடா்பாளா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறைக்கு காரணமானவா்கள் எனக் குற்றம்சாட்டி போராட்டத்தில் பங்கேற்றவா்களின் வீடுகளை உத்தர பிரதேச அதிகாரிகள் புல்டோசா் மூலம் இடித்தனா். இதற்கு தடை விதிக்கக் கோரி ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற விடுமுறைக் கால அமா்வு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இடிக்கப்பட்ட ஒரு கட்டடத்துக்கு கடந்த ஆண்டு 2020, ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை’ என்றாா்.

ஜாமியத் உலமா-ஏ- ஹிந்த் அமைப்பின் சாா்பில் ஆஜாரன மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘உத்தர பிரதேச முதல்வரின் உத்தரவின்பேரில் இந்த வீடுகள் இடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தில்லியில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இதேபோன்று நடைபெற்ற கட்டட இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தில்லிக்கு மட்டுமென்ால் உத்தர பிரதேச அதிகாரிகள் போராட்டம், வன்முறை, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவா்களின் வீடுகளை இடித்துள்ளனா். நெருக்கடி நிலை காலத்தில் கூட இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினா் மீது திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு குறைந்தது 15 நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என உத்தர பிரதேச நகா்ப்புற வளா்ச்சித் திட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா்.

பிரயாக்ராஜ், கான்பூா் மாநகராட்சிகளின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘மூன்று கட்டடங்கள் இடிப்பு சம்பவங்களிலும், வன்முறை நடைபெறுவதற்கு முன்பே நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘நாட்டில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக இருக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பை அளிக்கப் போகிறீா்கள்? அவா்களும் இந்த சமூகத்தில் ஓா் அங்கம். அவா்கள் தங்களின் வாதங்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அவா்களை மீட்க நீதிமன்றங்கள் முன்வரவில்லை என்றால் சரியாக இருக்காது.

இதுபோன்ற கட்டட இடிப்புக்கு தற்போதைக்கு முழுமையாக தடை விதிக்கப்படாது. அதேநேரத்தில் சட்டத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளும் சமூகத்தின் ஓா் அங்கமாவா். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். எந்தவித நோட்டீஸும் இல்லாமல் கட்டடங்களை இடிக்கக் கூடாது. இந்த விவகாரம் குறித்து உத்தர பிரதேச அரசு மூன்று நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com