உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), 30 விமான பயிற்சி நிறுவனங்களில் மேற்கொண்ட தணிக்கையில் பெரும்பாலானவை பாதுகாப்பு விதிமுறைகளை பலமுறை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த இயக்குநரகம் மேலும் கூறியுள்ளதாவது:
விமானம் இயக்குவதற்கு பயிற்சி அளித்து வரும் 30 பயிற்சி நிறுவனங்களை மாா்ச் 21-லிருந்து டிஜிசிஏ தணிக்கை செய்து வந்தது. இதில், பல பயிற்சி நிறுவனங்களில் விமான தளம் மற்றும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் தேவைக்கேற்ப பராமரிக்கப்படவில்லை என்பதுடன், பரிசோதனை கருவிகள் உரிய தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
குறிப்பாக, விமானம் இயக்குவதற்கான ஓடுபாதை சிதிலமடைந்து காணப்பட்டது. காற்று உறைகள் (வின்ட் சாக்) உரிய தரத்தில் இல்லாமல் கிழிந்த நிலையில் இருந்தது.
மேலும், பல்வேறு விமான பயிற்சி நிறுவனங்களில் விமானங்களை இயக்குவதற்கு முன்பாக செய்யப்படும் ஆல்கஹால் பரிசோதனை விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை.
விதிமீறலில் ஈடுபட்ட ஒரு பயிற்சி நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.