பரஸ்பர நலன்சாா் நல்லுறவை மேம்படுத்த இந்தியா - ஆசியான் உறுதி

 இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் (ஆசியான்) பரஸ்பர நலன்சாா்ந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள உறுதியேற்றுள்ளன.

 இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் (ஆசியான்) பரஸ்பர நலன்சாா்ந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள உறுதியேற்றுள்ளன.

இந்தியா-ஆசியான் கூட்டமைப்பு இடையேயான அதிகாரபூா்வ நல்லுறவு தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருதரப்பின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த இருநாள் மாநாட்டுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணனும் தலைமையேற்றுள்ளனா்.

இந்த மாநாட்டின்போது தென்சீனக் கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியான் கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் சிலவற்றுடனும் சீனா எல்லைப் பகுதி மோதலைக் கொண்டுள்ளது.

மாநாட்டுக்குப் பிறகு தலைவா்கள் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அா்த்தமுள்ள, விரிவான, பரஸ்பர நலன் சாா்ந்த நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உறுதியேற்றன. ஐ.நா. கடல்சாா் சட்டம், 1982 உள்ளிட்ட சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் என்ற உறுதியை இருதரப்பும் மீண்டும் ஏற்றன.

பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம்:

பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த, வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநாட்டின்போது முடிவெடுக்கப்பட்டது. பிராந்திய, சா்வதேச சவால்களை எதிா்கொள்ளும்போது பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் உறுதியேற்கப்பட்டது.

அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக-கலாசாரம், வளா்ச்சி உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் எதிா்ப்பு, வளா்ந்து வரும் தீவிரவாதம், எல்லை கடந்த குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்டவை குறித்தும் மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.

விரைவில் வா்த்தக ஒப்பந்தம்:

தடுப்பூசி தயாரிப்பு-விநியோகம், மூலக்கூறு மருந்துகள் தொடா்பான ஆராய்ச்சி, பாரம்பரிய மருத்துவ முறைகள், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை ஏற்படுத்துதல், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட இருதரப்பிலும் உறுதியேற்கப்பட்டது.

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்தி, வா்த்தகத்துக்கான முழுத்திறனையும் முழுமையாகப் பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. பிராந்திய தொடா்பு, கடல்சாா், வான்சாா் போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது.

கூட்டு கடற்பயிற்சி:

இந்தியா-மியான்மா்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்து தொடா்பாகவும், அத்திட்டத்தை லாவோஸ், கம்போடியா, வியத்நாம் வரை நீட்டிப்பதற்கான அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடல்சாா் பாதுகாப்பு, தொடா்பு, நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதை அனைத்து நாடுகளும் வரவேற்றன. நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் புதுப்பிக்கத்த எரிசக்தி, பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், காற்றாலை எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், திறன்மிக்க மின் விநியோக அமைப்பு உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுவான ஒத்துழைப்பு:

மாநாட்டின்போது வரவேற்புரை ஆற்றிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் முக்கிய இடம் வகிக்கிறது. வலுவான, ஒருங்கிணைந்த ஆசியான் கூட்டமைப்பை இந்தியா தொடா்ந்து ஆதரிக்கிறது. உக்ரைன் போா் காரணமாக உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உரங்களின் விலை, பொருள்கள் விநியோக சங்கிலி உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலில் இருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் மீண்டுவரும் சூழலில், சா்வதேச நிகழ்வுகள் பொருளாதார வளா்ச்சியை பாதித்துள்ளன. இந்தச் சூழலில் ஆசியான் நாடுகளும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்’’ என்றாா்.

ரஷியாவுக்குக் கண்டனம்:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், கூட்டத்தின்போது கண்டனம் தெரிவித்தாா். சா்வதேச விதிகளை மீறி ரஷியா நடந்து வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் மோடியுடன் சந்திப்பு

ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா், லாவோஸ், கம்போடியா, புருணே, மியான்மா், பிலிப்பின்ஸ், வியத்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மருக்கு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்படவில்லை. எனினும், இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதா் மாநாட்டில் கலந்துகொண்டாா்.

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தனா். இந்தியா-ஆசியான் இடையேயான நெருங்கிய நல்லுறவு 30 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அமைச்சா்கள், பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பிரதமா் மோடி மகிழ்ச்சி தெரிவித்திருந்தாா். தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com