ஷிண்டே முகாமில் விஷ ஊசி செலுத்தப்பட்டதா? தப்பித்து வந்த சிவசேனை எம்எல்ஏ அதிர்ச்சித் தகவல்

சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முகாமிலிருந்து தப்பித்து வந்த எம்எல்ஏ-க்கள் இருவர், அங்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மாலை உரையாற்றிய உத்தவ்
மாலை உரையாற்றிய உத்தவ்


சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முகாமிலிருந்து தப்பித்து வந்த எம்எல்ஏ-க்கள் இருவர், அங்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் சிவசேனை எம்எல்ஏ-க்கள் சிலர் உள்ளனர். இங்கிருந்து நிதின் தேஷ்முக் மற்றும் கைலாஷ் பாட்டில் ஆகிய இரண்டு எம்எல்ஏ-க்கள் சூரத்திலிருந்து தப்பித்து மகாராஷ்டிரம் வந்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அங்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், குஜராத் காவல் துறையினர் கொலை செய்ய முயற்சித்ததாகவும் நிதின் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"நான் தவறாக வழிநடத்தப்பட்டு சூரத் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தேன், ஆனால் குஜராத் காவல் துறையினர் என்னைத் தடுத்து நிறுத்தினர். எனக்கு எந்த உடல்நிலைப் பிரச்னையும் கிடையாது. ஆனால், குஜராத்தில் உள்ள மருத்துவர் எனக்கு இதயப் பிரச்னை இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நிறைய கேள்விகள் கேட்டேன். ஆனால், திருப்தியளிக்கும் வகையிலான எந்தப் பதிலையும் அவர்கள் கொடுக்கவில்லை. பிறகு, அவர்கள் சில ஊசிகளைக் கொடுத்தனர். அது என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியது.

200-250 குஜராத் காவலர்கள் என்னைப் பின்தொடர்ந்தனர். நான் தப்பிக்க முயற்சித்தபோது அவர்களுள் சிலர் என்னைத் தாக்கினர். அங்கிருந்து தப்பித்து மகாராஷ்டிரம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனை தொண்டர்களின் ஆதரவினால்தான் நான் சிவசேனை எம்எல்ஏ. குவஹாட்டியிலுள்ள எம்எல்ஏ-க்கள் மும்பை திரும்பி உத்தவ் தாக்கரே பக்கம் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com