
ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
சென்னை: தமிழகத்தில் உள்ள சாலையோரக் கடைகளில், பத்துக் கடைகளில் ஒன்று, பயன்படுத்திய எண்ணெய் நாள் முழுக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாகவும், ஐந்து கடைகளில் ஒன்று பயன்படுத்திய எண்ணெய்யுடன் புதிய எண்ணெய் கலந்து பயன்படுத்துவதாகவும் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மாதம் மத்திய அரசு சார்பில் தில்லியில் விருது வழங்கப்பட்ட நிலையில்தான், இந்த ஆய்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க.. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 8 உணவுகள்
தமிழகத்தில் சுமார் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 2,333 வியாபாரிகளிடம் கடந்த நான்கு மாதங்களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள உணவகங்களில் 95 சதவீதம் கடைகள், மொத்த வியாபாரிகள் அல்லது சில்லறை வியாபாரிகளிடமிருந்துதான் எண்ணெய் வாங்குகிறார்கள். 4 சதவீத சாலையோர உணவுக் கடைகள் மட்டுமே உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் பயன்படுத்திய எண்ணெய்யை வாங்கிவந்து பயன்படுத்துகிறார்கள். விலைக் குறைவு என்பதால், பெரும்பாலான கடைகளில் பாமாயில்தான் பயன்படுத்தப்படுகிறது என்கிறது ஆய்வு முடிவு.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தினுடைய அமைப்பான, பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்யும் அமைப்புக்கு விற்பனை செய்ய 5% வணிகர்கள் முன்வருவதில்லை. ஆர்யுசிஓ எனப்படும் இந்த அமைப்பானது, நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் எண்ணெய் பயன்பாடு இருக்கும் உணவகங்களிலிருந்து பயன்படுத்திய எண்ணெய்யை வாங்கி மறுசுழற்சி மேற்கொள்ளுவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும்?
சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும் போது, அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் மாற்றமடைகின்றன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட, நெறிமுறைகளின்படி, எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஒருவேளை, மீண்டும் பயன்படுத்த நேரிட்டால், அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே சூடுபடுத்தலாம் என்கிறது.
அதாவது, மீண்டும் சூடுபடுத்துவது மற்றும் மீண்டும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏற்கனவே பயன்படுத்தி, மிச்சமாகும் எண்ணெண்யை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். தாவர எண்ணெண்யை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலிருந்து வெளியாகும் கழிவு உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.
இதுபோன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்யிலிருந்து வெளியேறும் கொழுப்பு, உடலின் செரிமாணத்துக்கு கேடுவிளைவிக்கும். புற்றுநோய், உணவு செரிமாணக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
எண்ணெய்யை அதிகம் சூடுபடுத்தும்போது அதில் ஏற்படும் ஆக்ஸினேற்ற அழுத்தம், இரத்தக் குழாய்களில் தங்கி ஆபத்தை ஏற்படுத்தும். உடம்பில் கெட்ட கொழுப்பு சேரவும், இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படவும், புற்றுநோய் உருவாகவும் காரணிகளாக அமைகின்றன.
ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை என்ன செய்வது?
சூரியகாந்தி எண்ணெய்யின் அதிகபட்ச கொதிநிலை 400 டிகிரி பாரன்ஹீட். எனவே, இந்த எண்ணெயை அதிகம் வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஒரு வேளை சூரியகாந்தி எண்ணெய்யை ஒரு முறை வறுக்கப் பயன்படுத்திவிட்டீர்கள். மீதமான அதே எண்ணெய் மீண்டும் வறுக்கப் பயன்படாமல், அதிகம் சூடுபடுத்த வேண்டியது இல்லாத உணவுகளுக்குப் பயன்படுத்தலாம்.