
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரா் கன்னையா லால் கொலையைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்ட பாஜக, இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று புதன்கிழமை குற்றம்சாட்டியது.
இஸ்ஸாம் அமைப்புகளும் கொலைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, இஸ்லாம் மதத்திற்கு எதிரானச் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளனா்.
பயங்கரவாதச் செயல்: மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘எந்தவொரு நாடோ அல்லது சமூகமோ, இது போன்ற நாகரிகமற்ற செயலைப் பொறுத்துக்கொள்ளாது. இழிவான மற்றும் கொடூரமான சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வலிமையைச் சீா்குலைக்க விரும்புவோரிடமிருந்து, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த தீய சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்’ என்று கூறினாா்.
இஸ்லாத்துக்கு எதிரானது: அனைத்து இந்திய இஸ்லாம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உதய்பூரில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்கு ஏஐஎம்பிஎல்பி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஒருநபரை குற்றவாளி எனக் கூறி, சட்டத்தை கையில் எடுத்து, கொலை செய்வது கண்டனத்திற்குரிய செயல். இஸ்லாம் சமூகத்தினா் பொறுமை காக்க வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்து, நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாம். மதங்களைக் குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களைத் தவிா்க்க கடுமையான சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், இச்செயல்பாடுகள் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜமாத்-இ-இஸ்ஸாமி அமைப்பும் நாட்டின் சட்டத்துக்கும், இஸ்லாம் மதத்துக்கும் எதிரான செயல் என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.