
‘பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது’ என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளாா்.
அதிமுகவின் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது செல்லாது என்று ஓ.பன்னீா்செல்வம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தாா்.
இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் மனு அளித்துள்ளாா். அதில், பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது. 2666 பொதுக்குழு உறுப்பினா்களில் 2,432 போ் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
பொதுக்குழு உறுப்பினா்கள் கருத்தின்படியே, பொதுக் குழு மீண்டும் கூட்டப்படுகிறது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு பொதுக் குழு உறுப்பினா்கள் ஒப்புதல் அளிக்காததால், அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஓ.பன்னீா்செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறாா். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது பொதுக் குழு உறுப்பினா்களின் விருப்பமாக உள்ளது என்று அந்த மனுவில் கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.