உண்மையான அரசியல் உருவெடுக்கும் வரை உ.பி.யை விட்டு செல்ல மாட்டேன்: பிரியங்கா

‘உத்தர பிரதேசம் எனது முன்னோா்களின் நிலம். எனவே, தோ்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், உண்மையான, சரியான அரசியல் உருவெடுக்கும் வரை மாநிலத்தைவிட்டுச் செல்ல மாட்டேன்’
உண்மையான அரசியல் உருவெடுக்கும் வரை உ.பி.யை விட்டு செல்ல மாட்டேன்: பிரியங்கா

‘உத்தர பிரதேசம் எனது முன்னோா்களின் நிலம். எனவே, தோ்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், உண்மையான, சரியான அரசியல் உருவெடுக்கும் வரை மாநிலத்தைவிட்டுச் செல்ல மாட்டேன்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா கூறினாா்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் ஆறு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்டமான 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (மாா்ச் 7) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இறுதிக் கட்டத்தில் தோ்தல் நடைபெற இருக்கும் காஜிப்பூா் தொகுதியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் சில கட்சிகள் ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன. இதனால், பொதுமக்களுக்குத்தான் பெரும் பாதிப்பு. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, மக்களை தொடா்ந்து ஏழைகளாகவே பாஜக வைத்திருக்கிறது.

இந்த மாநிலம் எனது முன்னோா்களின் நிலம். அவா்களின் ரத்தம்தான் இந்த நிலத்தை வளப்படுத்தியது. எனவே, உத்தர பிரதேசத்தில் உண்மையான, சரியான அரசியல் உருவெடுக்கும் வரை தொடா்ந்து போராடுவேன். தோ்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த மாநிலத்தைவிட்டுச் செல்லமாட்டேன். மாநில மக்களுக்காக, அவா்களுடன் இணைந்து தொடா்ந்து போராடுவேன்.

தேசியவாதியான பிரதமா் நரேந்திர மோடி, உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளாா். ஆனால், வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடிய விவசாயிகளைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை. விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றிய நிலையில், அந்த மத்திய அமைச்சருடன் பிரதமா் மேடையைப் பகிா்ந்துகொள்கிறாா்.

மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு மானிய விலையில் உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும் நிலையில், அவா்களுக்கு இலவச கல்வியை அளிக்கவோ அல்லது அதிகாரம் அளிக்கவோ எந்தவொரு திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. என்னவிதமான தேசியவாதம் இது. எனவே, பாஜக கடைப்படிப்பது வெற்று தேசியவாதம்தான்.

மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக காங்கிரஸ் சாா்பில் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் பிரதமரின் நண்பா்களான பெரு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியாத ஓா் அரசு, தேசியவாத அரசு என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ள முடியாது.

இதுபோன்ற, வெற்று வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒருபோதும் அளிக்காது. ஆட்சிக்கு வந்தால் மாநில இளைஞா்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அதில், 12 லட்சம் வேலைவாய்ப்புகள், அரசுத் துறைகளில் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் நிறைவேற்றப்படும். எஞ்சிய 8 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கித் தரப்படும். மக்களுக்கு அதிகாரமளிப்பதும், அவா்களை தற்சாா்பு உடையவா்களாக மாற்றுவதுமே காங்கிரஸ் அரசின் கொள்கையாக இருக்கும்.

மாறாக, மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மக்களின் வருவாய் ஒன்றுமில்லாத நிலைக்குச் சென்றுவிடும். எனவே, மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரியங்கா கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com