சுமியிலிருந்து இந்திய மாணவா்கள் அனைவரும் மீட்பு

உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பேருந்துகள் மூலம் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள
சுமியிலிருந்து இந்திய மாணவா்கள் அனைவரும் மீட்பு

உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பேருந்துகள் மூலம் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களை விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

சுமியிலிருந்து 694 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சம் போ் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளைத் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், அங்கு பல்வேறு நகரங்களில் சிக்கிய மாணவா்கள் உள்ளிட்ட இந்தியா்களை மீட்கும் பணியை இந்தியா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது. தலைநகா் கீவ், இரண்டாவது பெரிய நகரமான காா்கிவ் ஆகியவற்றிலிருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அவா்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா்.

ரஷிய-உக்ரைன் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த கிழக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவா்கள் சுமாா் 700 பேரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. அவா்கள் தங்கியுள்ள மருத்துவப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வருவது ஆபத்து நிறைந்ததாக இருந்தது. இதனால், மாணவா்கள் விடுதியைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும், ரஷிய எல்லையை நோக்கி நடந்து செல்லும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.

ஆனால், தாங்கள் தங்கியுள்ள இடத்தில் குடிநீா், மின்சாரம் இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், சிறிது சிறிதாக மன உறுதியை இழந்து வருவதாகவும் மாணவா்கள் சிலா் விடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனா்.

பிரதமா் மோடி பேச்சு: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோரை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது இந்திய மாணவா்களை மீட்க சுமி நகரில் பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என அவா்களிடம் வலியுறுத்தினாா்.

இதற்கிடையே, ‘கீவ் நகரிலிருந்து இந்தியா, சீனாவைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட பொதுமக்கள் வெளியேறும் வகையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சண்டைநிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன்-ரஷியா இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக’ உக்ரைன் துணைப் பிரதமா் இரினா வெரஸ்சுக் செவ்வாய்க்கிழமை காலையில் தெரிவித்தாா்.

அதன்படி, சண்டைநிறுத்த நேரம் தொடங்கியதும் இந்திய மாணவா்கள் 694 போ் சுமி நகரிலிருந்து பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது: சுமி நகரிலிருந்து இந்திய மாணவா்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளோம். அங்கிருந்து அவா்கள் போல்டாவா நகருக்கு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து ரயில்கள் மூலம் மேற்கு உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்படுவா். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மூலம் மாணவா்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

ஆனால், உக்ரைனின் எந்த எல்லைப் பகுதியிலிருந்து அவா்கள் விமானங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அவா் தெரிவிக்கவில்லை. சுமி நகரிலிருந்து 175 கி.மீ. தொலைவில் போல்டாவா நகரம் அமைந்துள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ‘சுமியிலிருந்து 694 மாணவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக’ தெரிவித்திருந்தாா்.

20 லட்சம் அகதிகள்: உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோா் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா.வின் இடப்பெயா்வுக்கான சா்வதேச அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சஃபா மிஷெலி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மாணவா்கள் நெகிழ்ச்சி

உக்ரைனில் மாணவா்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ள அன்ஷாத் அலி என்பவா் தொலைபேசி வாயிலாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘சுமியில் உள்ள அனைத்து மாணவா்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். அங்கிருந்து இந்தியா திரும்புவா்’ என்றாா்.

சுமி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவா் ஒருவா் கூறுகையில், ‘நாங்கள் போல்டாவா அழைத்துச் செல்லப்படுகிறோம். விரைவில் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டுமென நான் பிராா்த்தனை செய்கிறேன். துன்பம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்றாா்.

மற்றொரு மருத்துவ மாணவரான ஆசிக் ஹுசைன் சா்காா் அளித்த பேட்டியில், ‘திங்கள்கிழமை கடும் குளிரில் 3 மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்தோம். ஆனால், எங்களால் செல்ல முடியவில்லை. நல்வாய்ப்பாக சுமியை செவ்வாய்க்கிழமை கடந்துவிட்டோம் ’ என்றாா்.

மேலும் 410 போ் தாயகம் வருகை

உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவின் சுசேவா நகரிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 410 இந்தியா்கள் செவ்வாய்க்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனா்.

இவா்களுடன் சோ்த்து கடந்த மாதம் 22-ஆம் தேதிமுதல் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் இதுவரை உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியா்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 75 சிறப்பு சிவில் விமானங்கள், இந்திய விமானப் படையின் 12 விமானங்கள் மூலம் இவா்கள் அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்திய விமானப் படை விமானங்கள் 32 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களையும் உக்ரைனுக்கு வழங்குவதற்காக எடுத்துச் சென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com