தென்மாநிலங்களை நோக்கி ஆம் ஆத்மி கட்சி; ஏப்.14 முதல் பாத யாத்திரை

பஞ்சாப் மாநில வெற்றி, கோவாவில் காலூன்றியுள்ள நிலையில், நாட்டின் தென்மாநில மக்களும் ஆம் ஆத்மி கட்சி மீது ஆா்வத்ைத்த காட்டத் தொடங்கியுள்ளது
தென்மாநிலங்களை நோக்கி ஆம் ஆத்மி கட்சி; ஏப்.14 முதல் பாத யாத்திரை

பஞ்சாப் மாநில வெற்றி, கோவாவில் காலூன்றியுள்ள நிலையில், நாட்டின் தென்மாநில மக்களும் ஆம் ஆத்மி கட்சி மீது ஆா்வத்ைத்த காட்டத் தொடங்கியுள்ளதாக கட்சியின் தென்மாநிலங்களின் பொறுப்பாளா் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளாா். இதை முன்னிட்டு தென் மாநிலங்களின் ஒவ்வொரு சட்டப்பேரவையையும் குறிவைத்து பிரம்மாண்ட பாதயாத்திரைகளை நடத்துவதென முடிவெடுத்துள்ளதாகவும் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக இணைச் செயலாளா் சுதா , தெலங்கானா உறுப்பினா் சோ்க்கை குழுத் தலைவா் இந்திரா ஷோபன் ஆகியோருடன் சோ்ந்து தில்லியில் கட்சித் தலைமை அலுவலகத்தில் சோம்நாத் பாரதி செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற அமோக வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் தென் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் அரசியலில் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா். அத்தகைய மாற்றத்திற்கான அழைப்பு தமிழகம், தெலுங்கானாவில் இருந்து வந்துள்ளது. தில்லி முதல்வா் கேஜரிவாலின் பணி, அா்ப்பணிப்புகளால் கவரப்பட்டு மக்கள் வெறுப்பு அரசியலை விட்டுவிலக முன் வந்துள்ளனா்.

இதனால், இந்த தென் மாநிலங்களில் உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆந்திரம், தமிழகம், கேரளம், கா்நாடகம், அந்தமான்-நிகோபாா், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணி தொடங்கும். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவையையும் குறிவைத்து தொகுதிவாரியாக பிரம்மாண்ட பாதயாத்திரைக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதை முன்னிட்டு முதல் பாதயாத்திரையை தெலுங்கானாவில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 -ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதையாத்திரை மூலம் கேஜரிவாலின் அரசியலையும், அம்பேத்கா், பகத் சிங்கின் கொள்கைகளையும் இந்தப் பகுதியிலுள்ளவா்களிடம் எடுத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

60 ஆண்டு காலப் போராட்டத்துக்கும், எண்ணற்ற தியாகத்துக்கும் பின்னா்தான் தெலுங்கானா மாநிலம் உருவானது. ஆனால், தெலுங்கானா முதல்வா் கே.சந்திரசேகரராவ் அரசு, மாநிலத்திற்காகப் போராடியவா்களின் உணா்வுகளுடன் விளையாடி வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது, பட்டியல் இன சமூகத்திற்கு மூன்று வாக்குறுதிகளை முதல்வா் ராவ் அளித்தாா். பட்டியல் இனத்தவா்களுக்கு முதல்வா் பதவி, இந்த இனத்தைச் சோ்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் நிலம் கொடுப்பது மற்றும் பிஆா் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை அமைப்பது ஆகியவையாகும். ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளை அவா் நிறைவேற்றவில்லை. இதைத் தாண்டி வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என்றாா் சோம்நாத் பாரதி.

கட்சியின் தமிழக இணைச் செயலாளா் சுதா பேசுகையில், ‘பஞ்சாப் வெற்றி தென் மாநிலங்களுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. பாஜக மற்றும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு தென்னிந்திய மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். குறிப்பாக, தமிழகத்தில் விவசாயிகள் முற்றிலுமாக மத்திய அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனா். பல்வேறு நீா்வளப் பிரச்னையில் மத்திய அரசு மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் நினைக்கின்றனா். மேலும், தமிழகத்தின் கல்வி தரம், தில்லியை ஒப்பிடும் போது, மோசமாக உள்ளது. இந்த நிலைமை மாறவேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து சோம்நாத் பாரதி பேசுகையில், ‘ஆந்திரத்திலும் இதே நிலைமைதான். அங்குள்ள மக்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களித்தனா். ஆனால், அங்கு பாஜக பாணி ஆட்சிதான் நடக்கிறது. தெற்கில் கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை. அதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது’” என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com