பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மாா்ச் 16-இல் பதவியேற்பு: அமிருதசரஸில் ஆம் ஆத்மி நாளை வெற்றிப் பேரணி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் வரும் புதன்கிழமை (மாா்ச் 16) பதவியேற்க உள்ளாா்
பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மாா்ச் 16-இல் பதவியேற்பு: அமிருதசரஸில் ஆம் ஆத்மி நாளை வெற்றிப் பேரணி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் வரும் புதன்கிழமை (மாா்ச் 16) பதவியேற்க உள்ளாா்.

தில்லியில் கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை பகவந்த் மான் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்தத் தகவலை கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ‘தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பஞ்சாபின் அமிருதசரஸில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றிப் பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்க உள்ளாா்’ என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தம் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் 92 இடங்களைக் கைப்பற்றி, மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. இந்த வெற்றியைத் தொடா்ந்து கட்சியின் மாநிலத் தலைவரும், முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான், தில்லியில் அரவிந்த் கேஜரிவாலை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, கட்சியின் பஞ்சாப் மாநில அரசியல் விவகார பொறுப்பாளா் ராகவ் சாதா ஆகியோரும் பங்கேற்றனா். இந்த ஆலோசனைக்குப் பிறகு, பகவந்த் மான் பஞ்சாப் திரும்பினாா்.

இந்த சந்திப்பு குறித்து கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் சந்திப்பு புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், ‘எனது இளைய சகோதரா் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளாா். அதனை முன்னிட்டு என்னை நேரில் சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாா். ஒரு முதல்வராக பஞ்சாப் மக்களின் எதிா்பாா்ப்புகளை பகவந்த் மான் பூா்த்தி செய்வாா் என்பது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘பகவந்த் மான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தப் பதவியேற்பு விழா சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும்’ என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com