2024 மக்களவைத் தேர்தலுக்கு அச்சாரம்!

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கு அச்சாரமிடும் வகையில்,  5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மூன்றாவது முறையாக 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கு அச்சாரமிடும் வகையில்,  5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. 4  மாநிலங்களில் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். மேலும், 4 மாநிலங்களில் அமைப்பு ரீதியாகவே காங்கிரஸ் பலவீனப்பட்டு இருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

உத்தர பிரதேச அரசியலைப் பொருத்தவரை ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது கடந்த  33 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. அதேபோல, 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் நீடித்து மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. அரசியலைப் பொருத்தவரை 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பின்பு என பிரித்துப் பார்க்க வேண்டும்.

காரணம், இதற்கு முன்பு 4 முனை போட்டியாக இருந்த உ.பி. அரசியல் இந்த முறை இரு துருவ அரசியலாக மாறியிருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக 41.3 சதவீத வாக்குகளையும், சமாஜவாதி கட்சி 32.06 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. பாஜக 255 தொகுதிகளையும், கூட்டணியாகச் சேர்ந்து 273 இடங்களையும் பெற்றது. சமாஜவாதி கட்சி தனித்து 111 தொகுதிகளையும், கூட்டணியாக 125 தொகுதிகளையும் பெற்றது.

இதைத் தவிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி 12.88 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியையும், காங்கிரஸ் 2.33 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளையும் பிடித்தன. கடந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்த்தால் இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜவாதி கட்சிகள் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பிற கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம், சமாஜவாதி கட்சியின் வாக்கு வங்கியைப் பார்த்தால் யாதவர்கள், இஸ்லாமியர்கள் முழுமையாக வாக்களித்துள்ளனர். பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இதுவரை வாக்களித்து வந்த இஸ்லாமியர்கள் சமாஜவாதி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குமிக்க, இம்ரான் மசூத் போன்றவர்கள்கூட சமாஜவாதி கட்சியில் ஐக்கியமாகினர். மேலும், ராஷ்ட்ரீய லோக் தளம், எஸ்.பி.எஸ்.பி. கட்சியுடன் கூட்டணி இருந்ததால் ஜாட், ராஜ்பர் வாக்குகளைக்கூட சமாஜவாதி பெற்றது. இதனால்தான் சமாஜவாதி கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்தது.

அதேபோல, காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ச்சியாக வாக்களித்து வந்த பிராமணர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸில் இருக்கும் பிராமண வாக்கு வங்கியை குறிவைத்து ஜிதின் பிரசாதாவை பாஜகவில் சேர்த்து 6 மாதங்களுக்கு முன்பே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து அமைச்சராக்கியது பாஜக.

  யாதவர்களுக்கும்,  ஜாதவர்களுக்கும் (மாயாவதி சார்ந்த சமுதாயம்) இருந்த முரண் காரணமாக சமாஜவாதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து வந்த ஜாதவர் வாக்கு வங்கி பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளதையும் தேர்தல் முடிவு காட்டுகிறது.

இந்த மாறுதல்கள் காரணமாக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் வீழ்ந்து, சமாஜவாதி, பாஜக வாக்கு வங்கி வளர்ந்துள்ளது என்பதை உ.பி. தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜாட் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்பதை உணர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜாட் இன தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரியதுடன், அந்த சமுதாயங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் எண்ணிக்கையையும் (42) இந்த முறை உயர்த்தினார்.

அதேபோல, சமாஜவாதியுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் ஜெயந்த் செüத்ரியை பாஜக கூட்டணிக்கு நேரடியாகவே அழைத்தார். இதுபோன்ற உத்திகளால் மேற்கு உ.பி.யில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியது.

2024இல் நரேந்திர மோடி பிரதமராக, 2022இல் யோகி ஆதித்யநாத் முதல்வராக வேண்டும் என்ற உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் முழக்கமும் மக்களிடம் எடுபட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக உ.பி.யில் தங்கியிருந்து தீவிரமாக களப்பணியாற்றிய பிரியங்கா காந்தியின் பிரசாரமும், அதிக பெண்களை களத்தில் வேட்பாளர்களாக இறக்கிய உத்தியும் பாஜக}சமாஜவாதி என்னும் இரு துருவ அரசியலுக்கு இடையே முற்றிலும் எடுபடவில்லை.

உத்தரகண்ட்:  உத்தரகண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற நடைமுறையே இருந்து வந்தது. இந்த முறை அது நடக்கவில்லை. பாஜக அங்கு தொடர்ந்து மூன்று முதல்வர்களை மாற்றியது. அதில் மூவரையும் ராஜ்புத் சமுதாயங்களில் இருந்தே நியமித்தது.

இப்படிப்பட்ட சூழலில் அங்கு காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் சூழல் இருந்தது. இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத்தை முன்னிறுத்துவதில் இருந்த குழப்பம் காரணமாக, காங்கிரஸ் அங்கு மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, ஹரீஷ் ராவத்கூட சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

பஞ்சாப்: கடந்த முறை பேரவைத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு முதல்வராக வெற்றி பெற்ற அமரீந்தர் சிங்கை மீண்டும் முன்னிறுத்தியிருந்தால் காங்கிரஸ் நூலிழையில் கூட வெற்றியைப் பெற்றிருக்கலாம் அல்லது இவ்வளவு சரிவு காங்கிரஸýக்கு ஏற்பட்டிருக்காது.

ஒருவேளை அமரீந்தர் சிங்கை நீக்கிய பிறகு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட சித்துவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தால்கூட இவ்வளவு பெரிய தோல்வியை காங்கிரஸ் பெற்றிருக்காது.

 சீக்கிய ஜாட் சமுதாயத்தை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, தலித் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த சரண்ஜீத் சிங் சன்னியை முதல்வராக அறிவித்ததை சீக்கிய ஜாட் மக்கள் முற்றிலும் ஏற்கவில்லை. அதேபோல, 38 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட தலித் சமுதாயத்திலும் முழு வாக்கு வங்கியை காங்கிரஸôல் பெற முடியவில்லை. பிற ஹிந்துக்களிடமும் அங்கு ஆதரவைப் பெற முடியவில்லை. 

 இதன் விளைவு, நுட்பமாக காய் நகர்த்திய அரவிந்த் கேஜரிவால், மக்கள் சொல்லும் நபரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவேன்  எனக் கூறி அதன் முடிவுகளின் அடிப்படையில் மென்மையான தோற்றம் கொண்ட சீக்கிய ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

 காங்கிரûஸ தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்து அகாலி தளத்துக்கு வாக்களிக்கும் ஜாட் சமுதாயத்தினர் கூட இந்த முறை ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர்.

அதேபோல, "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கை முதல் காங்கிரஸýக்கு வாக்களிக்கும் எஞ்சிய ஹிந்துக்கள், சன்னியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதால் பெரும்பான்மையாக ஆம்  ஆத்மிக்கு ஆதரவளித்தனர். இதன் விளைவு ஆம் ஆத்மி கட்சி 42 சதவீத வாக்குகளுடன்  92 தொகுதிகளைப்  பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 23 சதவீத வாக்குகளைப் பெற்று 18 தொகுதிகளை மட்டுமே பெற்றது.

சிரோமணி அகாலிதளம் கட்சி 18.38 சதவீத வாக்குகளுடன் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதேபோல, அமரீந்தர் சிங்குடன் கூட்டணியாகப் போட்டியிட்ட  பாஜகவின் வாக்கு வங்கி 5.4 சதவீதத்திலிரு ந்து 6.7 சதவீதமாக உயர்ந்தது. 
கோவா, மணிப்பூர்: சிறிய மாநிலங்களான கோவா, மணிப்பூர் ஆகியவற்றில் யார் ஆட்சியைப் பிடித்தாலும் அது பெரிய அளவில் அரசியல் முக்கியத்துவம் பெறப் போவதில்லை.

இருப்பினும், கடந்த முறை தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த காங்கிரஸ்  இந்த முறை ஏதாவது ஓர் உத்தியை கையாண்டு ஆட்சியை பிடித்திருக்க வேண்டியதையும் தவறவிட்டதுடன், மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

 இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் போன்றவை சிறுபான்மையின  வாக்குகளைப் பெற்றுவிட்டதால் காங்கிரஸ் அந்த மாநிலங்களில் பலவீனமடைந்தது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும், அதில் குளிர்காய்ந்து வெற்றிக் கனியைச் சுவைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்ததுதான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

  மக்களவைத் தேர்தல் வரும்போது காங்கிரஸ் தலைமையில் அணி அமைப்பதற்கு இந்த 5 மாநிலத் தேர்தல் மிகப் பெரிய முட்டுக்கட்டையாகவே மாறிவிட்டது. முழுநேரத் தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். 

5 மாநிலத் தேர்தல் முடிவால், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் காங்கிரஸ் கட்சி முழுமையாகச் சிக்கி, அவர்களின் முடிவுகளின்படியே தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரம், பிகார், ஜார்க்கண்ட், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த முறை காங்கிரஸ் பெற்ற தொகுதிகளைவிட இந்த முறை குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நரேந்திர மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சிகளால் அடையாளம் காட்ட முடியாத சூழலை இந்த 5 மாநிலத் தேர்தல் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகளையும், இதுவரை நடந்த தேர்தல் முடிவுகளையும் பார்க்கும்போது நேரு, இந்திரா காந்திக்கு பிறகு நாடு முழுவதும் அசுர பலத்துடன் கூடிய தலைவராக பிரதமர்  நரேந்திர மோடி உருவெடுத்திருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கெனவே ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலைவிட, மக்களவைத் தேர்தலில் மோடி தலைமைக்கு 10 முதல் 15 சதவீதம் கூடுதல் வாக்கு வங்கி கிடைத்து வரும் நிலையில், 2024மக்களவைத் தேர்தலிலும் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவதற்கு அச்சாரமிட்டுள்ளது இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com