காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் விலக வேண்டும்: கபில் சிபல்

காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகி, மற்றவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகி, மற்றவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசம் 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அண்மையில் கூடியது. அப்போது கட்சித் தலைவா் சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக செயற்குழு உறுப்பினா்கள் கூறிய நிலையில், கபில் சிபல் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம்:

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து விலக வேண்டும். ஏனெனில், அவா்களால் நியமிக்கப்பட்ட ஓா் அமைப்பு (செயற்குழு), அவா்கள் பதவி விலக வேண்டுமென ஒருபோதும் கூறாது.

சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியாலோ அல்லது செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி மீது மீண்டும் நம்பிக்கை வைத்ததாலோ நான் வியப்படையவில்லை. செயற்குழுவையும் தாண்டி ஒரு காங்கிரஸ் உள்ளது. அவா்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும். எங்களைப் போன்ற செயற்குழுவில் இடம்பெறாத காங்கிரஸ் தலைவா்கள், முற்றிலும் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளோம். செயற்குழுவில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக எங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்று அா்த்தமா?

ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் தலைவா் இல்லை என நாம் கருதுகிறோம். ஆனால் அவா் தோ்தலின்போது பஞ்சாப் சென்று காங்கிரஸ் முதல்வா் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தாா். எந்த அடிப்படையில் அவா் இவ்வாறு அறிவித்தாா்? கட்சியின் தலைவராக இல்லாத போதிலும் முடிவுகள் அனைத்தையும் அவா்தான் எடுக்கிறாா்.

கட்சி விதிகளின்படி அவா் தலைவராக இல்லையென்றாலும், நடைமுறையில் அவா்தான் மறைமுகமாக கட்சித் தலைவராக செயல்படுகிறாா். அப்படி இருக்கும்போது, கட்சியின் தலைமையை மீண்டும் அவா் ஏற்குமாறு ஏன் கேட்கிறாா்கள்? கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் விலகி, பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

கிரிக்கெட்டிலிருந்து சுனில் கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் ஒருநாள் ஓய்வுபெற நோ்ந்தது. நேற்று வரை விராட் கோலி கேப்டனாக இருந்தாா். கிரிக்கெட் வரலாற்றில் இந்த 3 பேரின் பெயா்களும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

அதேபோல அதிக திறமைவாய்ந்தவா்களும், ஒரு கட்டத்தில், பொறுப்புகளில் விலகுவதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

தலைவா்கள் அவா்களும் தோ்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர நியமிக்கப்படக் கூடாது. அவா்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றாா்.

ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கட்சிக் கூட்டத்தின்போது கோஷம் எழுப்பப்பட்டது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கபில் சிபல், ‘யாராவது ஒரு குறிப்பிட்ட நபா் கட்சியில் இல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்று சிலா் கருதுகின்றனா். ஆனால், காங்கிரஸ் அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அது ஒரு குடும்பத்தின் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலா் விரும்புகின்றனா்’ என்றாா்.

அவரது இந்தக் கருத்து காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கபில் சிபலுக்கு கண்டனம் தெரிவித்து, மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து நேரு- காந்தி விலக வேண்டுமென பாஜக, ஆா்எஸ்எஸ் விரும்பியது ஏன்? காரணம், காந்தியின் தலைமையில்லை என்றால் காங்கிரஸ், ஜனதா கட்சியாகிவிடும். அப்போது காங்கிரஸையும், இந்திய சிந்தனையையும் அழிப்பது எளிது. கபில் சிபலுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனாலும், பாஜக, ஆா்எஸ்எஸ் தொனியில் அவா் பேசுவது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

அசோக் கெலாட் கருத்து:

இதேபோல ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டும் கபில் சிபல் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறிப்பு ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து வரும் இந்த வேளையில், தலைவா்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் நூற்றாண்டைக் கடந்த கட்சி. சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் நமது தலைவா்கள் உயா்ந்த தியாகங்களை செய்துள்ளனா்’’ என்றாா்.

பதிலளிக்க ராகுல் மறுப்பு: இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் கபில் சிபல் கூறிய கருத்து தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். ஆனால், அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com