12 - 14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: மோடி வாழ்த்து

நாடு முழுவதும் உள்ள 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் உள்ள 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 12 - 14 வயதுடையோருக்கு இன்றுமுதல் கோர்பிவேக்ஸ் தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

இந்திய குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இன்று முக்கியமான நாள். தற்போது 12 - 14 வயதுடையோர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

உலகின் மிகப்பெரிய இந்திய தடுப்பூசி இயக்கம் அறிவியலால் இயக்கப்படுகிறது. நமது குடிமக்களை பாதுகாக்கவும், தொற்று நோய்க்கு எதிராகவும் நமது போராட்டத்தை வலுப்படுத்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்கினோம்.

நமது விஞ்ஞானிகளும், கண்டுபிடிப்பாளர்களும், தனியார் துறையினரும் இந்தச் சந்தர்ப்பத்தில் உயர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. 2020-இன் பிற்பகுதியில், மூன்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை நேரடியாக நான் பார்வையிட்டேன்.

ஜனவரி 2021ஆம் ஆண்டு நமது முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தோம். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருப்பவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

மார்ச் 2020ஆம் ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் இருக்கும் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினோம். பின்பு, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி தேவைபடுவோருக்கு இலவசமாக வழங்கப்பட்டதிற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைய வேண்டும்.

தற்போது, 180 கோடிக்கும் மேற்பட்ட தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 - 17 வயதுடையோருக்கு 9 கோடி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை 2 கோடி தடுப்பூசிகள் அடங்கும். இது கரோனாவுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில், இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மக்களால் இயக்கப்பட்டது. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், நாம் பலர் தடுப்பூசி செலுத்த தயங்கினோம். இங்குள்ள மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வதோடு நின்றுவிடாமல், மற்றவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தினர்.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு நமது மாநில அரசுகள் அளித்த ஆதரவிற்காக நான் பாராட்ட விரும்புகிறேன். பல மாநிலங்கள், குறிப்பாக மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள், மொத்த தடுப்பூசி சதவீதத்தையும் எட்டியுள்ளன. மேலும் பல பெரிய மாநிலங்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

தடுப்பூசி திட்டத்தின் கீழ், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பினோம். இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று, இந்தியாவில் பல ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் உள்ளன. உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கவுள்ளோம். இந்த கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில், கரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com