
தமிழகத்திலுள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட கோரி தாக்கலான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கே .கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் வழக்குரைஞர் ஜெயா சுகின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜெயா சுகின் ஆஜராகி, "தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் பதவி நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், கோயில்களில் தூய்மைப் பணி, பராமரிப்புப் பணி, சுவாமி சிலைகளுக்கு பூ அலங்காரம் செய்யப்படாத நிலை உள்ளது. மேலும், கோயில் தொடர்பான பணிகளை முறையாகச் செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதுதவிர, பக்தர்கள் கோயிலில் செலுத்தும் காணிக்கை வேறு பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இதனால், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அறங்காவலர்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமிக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், அறங்காவலர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனால் இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், இந்து சமயஅறநிலையத் துறைக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.