
சதானந்த் தனவடே (படம்: பேஸ்புக்)
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வர், அமைச்சர்கள் இன்னும் பதவியேற்காத நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது.
கோவா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இன்னும் முதல்வர், அமைச்சர்கள் எவரும் அங்கு பதவியேற்கவில்லை. முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் சதானந்த் தனவடே, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகத் தொடங்கிவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | லஞ்ச ஒழிப்பு உதவி எண்: பஞ்சாப் முதல்வர் அதிரடி
அவர் மேலும் கூறியதாவது:
"மத்திய பாஜக தலைவர்களுக்கு வெற்றி வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டது. முதல்வரைத் தேர்வு செய்யும் முடிவு மத்தியத் தலைவர்களிடம் உள்ளது. ஹோலி பண்டிகைக்குப் பிறகு புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
தெற்கு மற்றும் வடக்கு கோவா என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டமிடலை நாங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். 100 சதவிகிதம் நாங்கள் வெற்றி பெறுவோம்."
காபந்து முதல்வராக இருக்கும் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவலறிந்த கட்சி வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.