
சித்து
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து புதன்கிழமை விலகினாா்.
5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உத்தரவிட்டிருந் நிலையில், சித்து விலகியுள்ளாா்.
தனது பதவி விலகல் தொடா்பாக சித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப எனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.
சோனியா காந்திக்கு எழுதிய பதவி விலகல் கடிதத்தில், ‘மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று மட்டும் சித்து குறிப்பிட்டுள்ளாா்.
117 தொகுதிகளுக்கு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவை தோ்தலை ஆளும் கட்சியாக இருந்து காங்கிரஸ், 18 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சித்துவும் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். கடந்த ஜூலை மாதம்தான் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்றாா். கோவா, உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலைவா்கள் ஏற்கெனவே பதவி விலகி விட்டனா்.