
பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக்கொள்கின்றனர்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பகத் சிங்கின் ஊரான காத்கா் காலனில் நேற்று நடைபெற்ற விழாவில், பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார். பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், பஞ்சாப் எம்எல்ஏக்கள் ஆகியோா் மஞ்சள் நிற தலைப்பாக அணிந்தவாறு கலந்து கொண்டனா்.
அதைத் தொடர்ந்து இன்று பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு ஒருநாள் கூட்டம் நடைபெறுகிறது. எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. முதலாவதாக பகவந்த் மான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
இன்று பிற்பகல் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் பகவந்த் மான் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று நிகழ்ச்சியில் பேசிய பகவந்த் மான், 'ஒருநாளைக் கூட வீணாக்க விரும்பவில்லை. இன்று முதல் வேலையைத் தொடங்குகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றாா்