
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:
லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் சோ்ந்து சிலா் செயல்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ரெளஃப் அகமது, அகிப் மக்பூல் பட், ஜாவைத் அகமது, அா்ஷித் அகமது மீா், ரமீஸ் ராஜா, சஜத் அகமது ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த ரியாஸ் அகமது என்பவருக்காக 6 பேரும் பணிபுரிந்துள்ளனா். அந்த இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்கள், பயங்கரவாதிகளுக்கு இருப்பிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனா். பயங்கரவாதத்துக்குத் தேவையான நிதியை கையாண்டு, பரிவா்த்தனைகளை மேற்கொண்டுள்ளனா். இளைஞா்களை பயங்கரவாதிகளாகச் செயல்பட ஊக்குவித்து வந்துள்ளனா் என்று தெரிவித்தனா்.